கொழும்பு: இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் 2 வீரர்களுக்கு தங்களது முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்தியா – இலங்கை அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி இன்று கொழும்பு பிரேமதாச மைதானத்தில் தொடங்கியுள்ளது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
ஷிகர் தவான் தலைமையிலான 20 பேர் கொண்ட இந்திய அணியில் 6 வீரர்கள் இதுவரை ஒரு சர்வதேச போட்டிகளில் கூட ஆடாதவர்கள் ஆகும்.
14 வீரர்கள் மட்டுமே சர்வதேச அனுபவம் கொண்டவர்கள். எனவே யாருக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருந்தது.
இந்நிலையில் இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷான் ஆகியோர் தங்களது முதல் சர்வதேச போட்டியில் களமிறங்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் ஓப்பனிங் ஜோடியாக ஷிகர் தவானுடன் இளம் வீரர் ப்ரித்வி ஷா களமிறங்கவுள்ளார்.
இவர்கள் ஏற்கனவே ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக ஓப்பனிங் களமிறங்கியுள்ளதால், அந்த நம்பிக்கையில் டிராவிட் இந்த முடிவை எடுத்துள்ளார். முதல் விக்கெட்டிற்கு இஷான் கிஷான் களமிறங்குகிறார்.
பேட்டிங்கின் மிடில் ஆர்டரில் அனுபவ வீரர்களான மணிஷ் பாண்டே, சூர்யகுமார் யாதவ், ஹர்த்திக் பாண்ட்யா ஆகியோருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் போட்டிகளில் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்ட மணிஷ் பாண்டே இந்த போட்டி மூலம் தனது ஃபார்மை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இதே போல ஹர்திக் பாண்ட்யாவும் தனது பவுலிங் திறமையை வெளிப்படுத்த காத்துள்ளார்.
சுழற்பந்துவீச்சை பொறுத்தவரை யுஸ்வேந்திர சாஹல் மற்றும் குல்தீப் யாதவுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இவர்களுடன் க்ருணால் பாண்ட்யா சேர்க்கப்பட்டுள்ளனர். வேகப்பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார் மற்றும் தீபக் சஹார் மட்டுமே இடம்பெற்றுள்ளதால் ஹர்த்திக் பாண்ட்யாவும் பந்துவீசுவது உறுதியாகியுள்ளது.
ஷிகர் தவான், ப்ரித்வி ஷா, இஷான் கிஷான், மணிஷ் பாண்டே, சூர்யகுமார் யாதவ், ஹர்த்திக் பாண்ட்யா, க்ருணால் பாண்ட்யா, தீபக் சஹார், புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.