டித்வா வீட்டுத்திட்ட நிதி எப்போது கிடைக்கும்? கடன்சுமையில் பரந்தன் மக்கள்!

கிளிநொச்சி மாவட்டத்தில் இடைநிறுத்தப்பட்டுள்ள டித்வா புயல் வீட்டுத்திட்டத்திற்கான எஞ்சிய நிதியை உடனடியாக வழங்குமாறு வலியுறுத்தி, பரந்தன் கிராம மக்கள் இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பரந்தன் கிராமத்தைச் சேர்ந்த பயனாளர்களே, கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

டித்வா வீட்டுத்திட்டத்தின் கீழ் தமக்கு வீடுகள் அமைப்பதற்கான அனுமதி கிடைத்திருந்த நிலையில், ஆரம்பக் கொடுப்பனவைப் பெற்றுக்கொண்டு கட்டுமானப் பணிகளை ஆரம்பித்ததாகவும், பின்னர் நிதி வழங்கல் இடைநிறுத்தப்பட்டதால் பெரும் கடன்சுமையை எதிர்கொண்டுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.

எனவே, வீட்டுத்திட்டத்திற்கான எஞ்சிய நிதியைத் தாமதமின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதன்போது, தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரையும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளித்தனர்.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுப்ரமணியம் முரளிதரன்,

டித்வா புயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுத்திட்டம் தொடர்பாகக் கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில், அமைச்சினால் கொடுப்பனவுகள் இடைநிறுத்தப்பட்டிருந்ததாகத் தெரிவித்தார்.

எனினும், தற்போது அமைச்சிடமிருந்து கிடைத்துள்ள அறிவுறுத்தல் கடிதத்தின் பிரகாரம், பாதிக்கப்பட்ட பயனாளர்களின் ஆவணங்களை முறையாக உறுதிப்படுத்தி, மாவட்டச் செயலாளர், பிரதேச செயலாளர் மற்றும் துறைசார் அதிகாரிகளின் பரிந்துரைகளுடன் சமர்ப்பிக்கும் பட்சத்தில், நிதியை விடுவிப்பதற்கான அனுமதியும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இதற்கமைய, பிரதேச செயலாளர்கள் பாதிக்கப்பட்ட பயனாளர்களின் ஆவணங்களைத் தயாரித்து அமைச்சுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

குறித்த ஆவணங்கள் கட்டம் கட்டமாக அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பின்னர், விரைவில் பயனாளர்களுக்கான நிதியை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply