யாழில் சமூகசக்தி தேசிய இயக்கத்தின் தரவு முறைமை தொடர்பான விழிப்புணர்வுச் செயலமர்வு!

சமூகசக்தி தேசிய இயக்கத்தின் கீழ் கிராம மட்டத் தரவுகளை நிகழ்நிலைத் தரவு முறைமையில் உள்ளீடு செய்வது தொடர்பான மாவட்ட மட்ட விழிப்புணர்வுச் செயலமர்வு, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்று (17.11.2026) மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போது, கிராமங்களின் சமூக, பொருளாதார நிலைமைகளைப் பிரதிபலிக்கும் துல்லியமான தரவுகளைச் சேகரித்து, அவற்றின் அடிப்படையில் அபிவிருத்தித் திட்டங்களைத் திட்டமிடுவதன் அவசியத்தை அரசாங்க அதிபர் வலியுறுத்தினார்.

வறுமை ஒழிப்பு என்பது பொருளாதார உதவிகளுடன் மட்டும் மட்டுப்படுத்தப்படாமல், குடிநீர், சுகாதாரம் மற்றும் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என அவர் தெரிவித்தார். 

மேலும், 2027ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தித் திட்டங்களை முன்கூட்டியே திட்டமிட்டு, மக்களின் உண்மையான தேவைகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

இதன்போது, கிராமிய அபிவிருத்தி தொடர்பான இரண்டு நூல்கள் அறிமுகப்படுத்தப்பட்டதுடன், நிகழ்நிலைத் தரவு முறைமை மற்றும் கிராம மட்ட அடிப்படைத் தரவுகளைச் சேகரித்து உள்ளீடு செய்வது தொடர்பில் வளவாளர்களால் விளக்கங்கள் வழங்கப்பட்டன.

அத்துடன், பிரதேச செயலாளர்களிடம் கிராம அடிப்படையிலான தரவு நூல்கள் கையளிக்கப்பட்டதுடன், திறந்தவெளிக் கலந்துரையாடலும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் க. சிவகரன், மாவட்டத் திட்டமிடல் பணிப்பாளர் இ. சுரேந்திரநாதன் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

Leave a Reply