யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் ஏற்பாட்டில், சிறு தொழில் முயற்சியாளர்களுக்கான வியாபாரத் திட்டம் தயாரித்தல் தொடர்பான நான்கு நாட்களைக் கொண்ட பயிற்சிச் செயலமர்வு
சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் எஸ். சசீபன் அவர்களின் தலைமையில் நேற்று (17.11.2026) காலை 9.30 மணிக்கு சர்வோதய நிலையத்தில் ஆரம்பமானது.
இச் செயலமர்வின் ஆரம்ப நிகழ்வில், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்துகொண்டு செயலமர்வை ஆரம்பித்து வைத்தார்.
சிறு தொழில் முயற்சியாளர்களின் வியாபார அறிவு, முகாமைத்துவத் திறன் மற்றும் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இச்செயலமர்வில், யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த 16 சிறு தொழில் முயற்சியாளர்களும் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 09 சிறு தொழில் முயற்சியாளர்களும் என மொத்தம் 25 பேர் கலந்துகொண்டனர்.
அதிதிகளின் வரவேற்பு மற்றும் மங்கல விளக்கேற்றலைத் தொடர்ந்து, சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் எஸ். சசீபன் அவர்கள் வரவேற்புரையையும் தலைமை உரையையும் நிகழ்த்தினார்.
அரசாங்க அதிபர் உரை :
சிறு தொழில் முயற்சியாளர்களுக்கான இத்தகைய பயிற்சிகள் அவர்களது நேரத்திற்கும் முயற்சிக்கும் பயனளிப்பதுடன், தொழில் வளர்ச்சிக்கு நடைமுறை ரீதியான பங்களிப்பை வழங்குவதாக அமைய வேண்டும் என அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் தொழிலாளர் பற்றாக்குறை, தொழிலாளர்களின் பொறுப்புணர்வு, நேர முகாமைத்துவம், வாடிக்கையாளர் திருப்தி மற்றும் நிதி வசதிகளைப் பெற்றுக்கொள்வதில் உள்ள சவால்கள் சிறு தொழில் முயற்சியாளர்களின் வளர்ச்சியைப் பாதிக்கின்றன. இத்தகைய சவால்களை எதிர்கொண்டு தொழில்களை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு முறையான பயிற்சியும் தெளிவான வணிகத் திட்டமிடலும் அவசியமாகும்.
மேலும், தொழில் முயற்சியாளர்களுக்கான பயிற்சிகள் குறிப்பிட்ட நாட்களுடன் நிறைவுபெறாமல், பயிற்சியின் பின்னரும் தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் வழிகாட்டல் வழங்கப்பட வேண்டும். குறிப்பாக, பயிற்சிகளில் அந்தந்தப் பிரதேச செயலகப் பிரிவுகளின் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கட்டாயம் இணைக்கப்பட வேண்டும். இதன்மூலம் தொழில் முயற்சியாளர்களின் தேவைகளை அடையாளம் கண்டு, அவர்களுக்குத் தேவையான உதவிகளையும் ஆலோசனைகளையும் பிரதேச மட்டத்தில் வழங்க முடியும்.
அத்துடன், தொழில் முயற்சியாளர்கள் தமது துறைகளுக்குரிய தொழில்சார் தகைமைகள் மற்றும் NVQ போன்ற அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்வதுடன், தலைமைத்துவம், நிதி முகாமைத்துவம், பணியாளர் முகாமைத்துவம் மற்றும் வாடிக்கையாளர் சேவை போன்ற திறன்களையும் மேம்படுத்திக்கொள்ள வேண்டும். தமது வணிகத் திட்டங்களைத் தயாரிக்கும்போது எதிர்பார்க்கப்படும் வருமானத்துடன், உற்பத்திச் செலவுகள், சந்தைப் போட்டி மற்றும் நடைமுறைச் சவால்கள் குறித்தும் உரிய கவனம் செலுத்த வேண்டும்.
இந்தப் பயிற்சியின் உண்மையான வெற்றி என்பது பயிற்சியை நிறைவு செய்வதில் மாத்திரமன்றி, அதன் மூலம் தொழில் முயற்சியாளர்கள் தமது வருமானத்தை அதிகரித்து, தொழில்களை விரிவுபடுத்தி, நிலையான பொருளாதார முன்னேற்றத்தை அடைவதிலேயே தங்கியுள்ளது என அரசாங்க அதிபர் மேலும் வலியுறுத்தினார்.
வியாபாரத் திட்டம் தயாரித்தல் :
வியாபாரத் திட்டம் தயாரித்தலின் முக்கியத்துவம் தொடர்பான விளக்கவுரையை சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் (நிர்வாகம்) M. Y. தாஸீன் அவர்கள் நிகழ்த்தினார்.
இப்பயிற்சியின் போது, வியாபாரத் திட்ட ஆவணத்தைத் தயாரிப்பதற்கான வழிகாட்டல்கள், புதிய வியாபார வாய்ப்புகளை அடையாளம் காணுதல், சந்தை ஆய்வு, வாடிக்கையாளர்களின் தேவைகளைப் புரிந்துகொள்ளுதல், வியாபார இலக்குகளை நிர்ணயித்தல், முதலீடு மற்றும் நிதி முகாமைத்துவம், வருமானம் மற்றும் செலவினங்களைக் கணிப்பிடுதல், இலாப நட்டக் கணக்கீடு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் பயிற்சிகளும் விளக்கங்களும் வழங்கப்படவுள்ளன.
இதன் மூலம் சிறு தொழில் முயற்சியாளர்கள் தமது வியாபார நடவடிக்கைகளை முறையாகத் திட்டமிட்டு முன்னெடுப்பதுடன், தொழில் வாய்ப்புகளை விரிவுபடுத்தி நிலையான பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கான அறிவையும் திறனையும் பெற்றுக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
வளவாளர்கள் :
இச்செயலமர்வின் வளவாளர்களாக சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் (நிர்வாகம்) M. Y. தாஸீன், உதவிப் பணிப்பாளர் எஸ். சசீபன் மற்றும் முயற்சியான்மை பயிற்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ரி. கிரிகரன், எஸ். கோகுலவாணி, எஸ். அமுதசுரபி ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இந் நிகழ்வில் சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் முயற்சியான்மை பயிற்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சிறு தொழில் முயற்சியாளர்கள் கலந்துகொண்டனர்.




