பாடசாலை செல்லும் வழியில் 13 வயது மாணவி உயிரிழப்பு- வென்ச்சர் 50 ஏக்கர் தோட்டத்திற்கு அடிப்படை வசதிகள் கோரி மக்கள் குரல்

நோர்வூட் பிரதேசத்திலிருந்து சுமார் 10 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள வென்ச்சர் 50 ஏக்கர் (Upper Venture) தோட்டத்தில், அடிப்படைப் போக்குவரத்து வசதிகள் இல்லாததால் மக்கள் பல ஆண்டுகளாகப் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

சுமார் 50 குடும்பங்களையும் 300 மக்களையும், 60 சிறுவர்களையும் கொண்ட இத்தோட்டத்தில் முறையான பொதுப் போக்குவரத்து வசதி இல்லை. இதனால் பாடசாலை மாணவர்கள் பால் சேகரிக்கும் வாகனங்கள், தேயிலை சேகரிக்கும் டிராக்டர்கள், முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட பாதுகாப்பற்ற போக்குவரத்து வழிகளைப் பயன்படுத்துவதுடன், பலர் நீண்ட தூரம் நடந்தே பாடசாலைக்குச் செல்கின்றனர்.

அவ்வாறு நடந்து செல்லும் மாணவர்கள் வழியில் சிறுத்தைகள், தேனீக்கள், காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், கடந்த நவம்பர் 25ஆம் திகதி பாடசாலைக்குச் செல்வதற்காகப் பால் சேகரிக்கும் வாகனத்தில் பயணித்த 13 வயதுடைய மாணவி ஒருவர், வாகனத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, வென்ச்சர் 50 ஏக்கர் தோட்டத்திற்கு முறையான பொதுப் போக்குவரத்து வசதியை ஏற்படுத்துதல், மாணவர்களுக்குப் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதிப்படுத்துதல், தோட்ட வீதிகளைப் புனரமைத்தல் மற்றும் வனவிலங்குகளால் ஏற்படும் அச்சுறுத்தல்களைக் குறைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை மக்கள் முன்வைத்துள்ளனர்.

மேலும், உயிரிழந்த மாணவியின் சம்பவம் தொடர்பில் உரிய விசாரணை நடத்தி, எதிர்காலத்தில் இத்தகைய துயரங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தனிநபர்களைக் குற்றம் சாட்டுவது தமது நோக்கமல்ல என்றும், நீண்டகாலமாக அடிப்படை வசதிகளின்றி வாழும் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு பெற்றுக்கொடுப்பதே தமது நோக்கம் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

கல்விக்காகச் செல்லும் குழந்தைகள் தமது உயிரைப் பணயம் வைக்க வேண்டிய நிலை மாற வேண்டும் என்பதே வென்ச்சர் 50 ஏக்கர் மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

Leave a Reply