கிழக்கில் இதுவரை 47,000தொற்றுகள் ,720 மரணங்கள்

  • கிழக்கில் இதுவரை 47,000தொற்றுகள் ,720 மரணங்கள்

கிழக்கில் இன்றைய நிலையும் – தடுப்பூசியின் அவசியமும் – விளக்குகிறார் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டொக்டர் ஏ.ஆர்.எம். தௌபீக்

-குணா-

கிழக்கு மாகாணத்தில் இதுவரை 47 ஆயிரத்துக்கு மேற்பட்ட கொவிட் தொற்றுக்களும் 720 மரணங்களும் ஏற்பட்டுள்ளன. கடந்த மே, ஜுன்,ஜுலை மாதங்களில் ஆக 5000 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் ஓகஸ்ட் மாதத்தில் 21,800 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்திய கலாநிதி டொக்டர் ஏ.ஆர்.எம். தௌபீக் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் இன்றைய நிலை தொடர்பாக கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

கடந்த மூன்று மாதங்களில் மே, ஜுன், ஜுலை முறையே 119, 132,106 மரணங்கள் ஏற்பட்ட நிலையில் கடந்த ஓகஸ்ட் மாதத்தில் 555 மரணங்கள் ஏற்பட்டுள்ளன . இச்சடுதியான அதிகரிப்பு கொவிட் 19 டெல்டா புரள்வினால் ஏற்பட்டிருக்க வாய்புண்டு. இந் நிலையில், அரசாங்கத்தால் கிழக்கு மாகாணத்துக்கு வழங்கப்பட்ட 15 இலட்சத்துக்கு மேற்பட்ட தடுப்பு மருந்துகளில் 7, 65,744 தடுப்பு மருந்துகள் முதலாவது முறையும் 4,85, 000 தடுப்பு மருந்துகள் இரண்டாவது முறையும் வழங்கப்பட்டுள்ளன. என கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டொக்டர் ஏ.ஆர்.எம். தௌபீக் தெரிவித்தார்.

அவர் மேலும் விபரிக்கையில்,

முப்பது வயதுக்கு மேற்பட்டோருக்கும் 18 – 30 வயதுக்குட்பட்ட முன்னிலை
கள உத்தியோகத்தர்கள் கர்ப்பிணி தாய்மார்கள் ஆசிரியர்கள் தொழிற்சாலை ஊழியர்கள் என இத் தடுப்பூசி வழங்கப்பட்டன.

கிழக்கு மாகாண அனைத்து பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவுகளிலும் 90 வீதத்துக்கு அதிகமாக தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. இரண்டாவது முறையான தடுப்பூசி அம்பாறை சுனுர்ளு பிரிவில் 75 வீதமும் கல்முனை சுனுர்ளு பிரிவில் 50 வீதத்துக்கு மேற்பட்டவர்களுக்கும் மட்டக்களப்பு சுனுர்ளு 60 வீதத்துக்கு மேற்பட்டவர்களுக்கும் திருகோணமலை சுனுர்ளு 60 வீதத்திற்கு மேற்பட்டவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான இரண்டாவது தடுப்பூசி 95 வீதம் செலுத்தப்பட்டுள்ளன. இராணுவத்தினரின் உதவியுடனும் சுகாதார துறை ஊழியர்களும் இணைந்து சகல மாவட்டங்களிலும் தடுப்பூசி பெற நிலையங்களுக்க செல்ல முடியாதவர்களுக்காக தடுப்பூசி செலுத்தும் நடமாடும் பணியை ஆரம்பித்து பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதற்கு அடுத்த கட்டமாக இவ்வாரம் கிடைக்கும் தடுப்பூசிகளையும் மீதியாக உள்ள தடுப்பூசிகளையும் பூரணமாக கொடுத்து முப்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் இரண்டாவது தடுப்பூசியை வழங்கி பூரணப்படுத்த சுகாதார அமைச்சரால் அறிவுறுத்தப்பட்டுள்ளோம்.
கூடிய விரைவில் 20 வயதுக்கும் முப்பது வயதுக்கும் உட்பட்டவர்களுக்கும் தடுப்பூசிகள் வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இத்திட்டம் மேல் மாகாணம் தென்மாகாணத்தில் தொடங்கியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இதுவரை ஏற்பட்ட தொற்றாளர்களையும் மரணங்களையும் ஆய்வு செய்யும் போது தடுப்பூசிகளை பெறாதவர்களும் முதலாவது தடுப்பூசிகளை மட்டும் பெற்று சிறிது காலம் சென்றவர்களுமே கொவிட் தாக்கதத்தால் அதிகமாக மரணமடைந்துள்ளார்கள். இதுவரை தடுப்பூசிகள் பெறாதவர்கள் உரிய நிலையங்களுக்கு சென்று தடுப்பூசிகளை பெற்று பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளுங்கள் என கேட்டுக்கொண்டார்.

இரண்டு தடுப்பூசிகளை பெற்றாலும் தேவையில்லாத ஒன்று கூடல்களை தவிர்த்தல், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி பேணுதல் போன்ற சுகாதார நடைமுறைகளை சரியான முறையில் பின்பற்றுதல் அவசியமாகும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

[embedded content]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *