
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 48வது கூட்டத்தொடரில், பாதிக்கப்பட்ட தரப்புகள் சார்பில் அறிக்கைகள் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் முடிவடைந்துவிட்டநிலையில் இலங்கையில் இருந்து தமிழர்கள் சார்பில் எந்தவொரு அறிக்கையும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்குச் சமர்ப்பிக்கப்படவில்லை. எனினும் இந்த கால அவகாசம் முடிந்ததன் பிற்பாடே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கட்சிகள் மனித உரிமைகள் ஆணையாளருக்கு கடிதம் அனுப்பும் நடவடிக்கையில் இறங்கியுள்ளன. இவ்வாறு தமிழ்த் தேசியக் கட்சிகளின் திருகுதாளத்தை அம்பலப்படுத்தியுள்ளார் பன்னாட்டு இராசதந்திரத் தளங்களில் தமிழர்களின் உரிமைகளுக்காக தொடர்ச்சியாக செயற்பட்டுவரும் மனித உரிமைகள் செயல்பட்டாளர் மரியதாஸ் மோகன்ராஜ் (பொஸ்கோ)
மேலும் இது குறித்து அவர் தெரிவிக்கையில்,
ஐ.நா.மனித உரிமைகள் கூட்டத்தொடருக்கு அறிக்கை சமர்ப்பிக்க விரும்பும், பாதிக்கப்பட்ட தரப்புகள் குறித்த கூட்டத்தொடர் ஆரம்பமாவதற்கு 21 நாட்களுக்கு முன்னரே அவற்றை அனுப்பி வைக்க வேண்டும்.
அதுவும் ஐ.நாவின் அங்கீகாரம் பெற்ற அமைப்புகள் ஊடாக அனுப்பப்படும் அறிக்கைகள், கடிதங்களே உத்தியோகபூர்வ ஆவணங்களாக ஏற்றுக்கொள்ளப்படும். தனியே கட்சி ரீதியாக நேரடியாக அனுப்பும் ஆவணங்கள் ஒருபோதும் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படாது.ஐ.நா வின் ECOSOC அங்கீகாரம் பெற்ற அமைப்புக்களினால் அனுப்பப்படும் ஆவணங்கள் மட்டுமே ஏற்கப்படும்.
அந்த வகையில் கடந்த ஓகஸ்ட் 23 ஆம் திகதிக்கு முன்னதாக ஈழத்தமிழர்கள் சார்பிலான ஆவணங்கள் அனுப்பப்பட்டிருக்க வேண்டும். புலம்பெயர் தேசங்களில் இயங்கும் அமைப்புகள் ஊடாக அவ்வாறு 27 ஆவணங்கள் இதுவரை ஐ.நாவில் சமர்ப்பிக்கப்பட்டபோதும், துரதிர்ஷ்டவசமாக இலங்கையில் ஈழத்தமிழர்கள் சார்பில் இருந்து எந்தவொரு அமைப்புகளோ, கட்சிகளோ குறித்த கால அவகாசத்துக்குள் ஆவணங்கள் எதனையும் அனுப்பி வைக்கவில்லை. அதேவேளை, மனித உரிமைகள் ஆணையாளரினால் 48வது கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ள இலங்கை குறித்த வாய்மூல அறிக்கை சகல நாடுகளுக்கும் அனுப்பப்பட்டு விட்டன. இலங்கை அரசாங்கமும் தன் சார்பிலான அறிக்கையை ஐ.நா.வுக்கு அனுப்பிவைத்துள்ளது.
இத்தகைய நிலையில் கால அவகாசம் முடிந்த பின்னர் இப்போதுதான் அவ்வாறான ஆவணங்களை அனுப்பி வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன. உண்மையில் இது மக்களை ஏமாற்றும் செயற்பாடுதான். இனிமேல் அனுப்பி வைக்கப்படும் எந்தவொரு ஆவணமும் 48வது மனித உரிமைகள் பேரவை அமர்வில் சேர்த்துக்கொள்ளப்படமாட்டாது. வேண்டுமானால் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள அமர்வில் சேர்த்துக் கொள்ளப்படலாம். அதுகூட ஐ.நா.வால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் அமைப்பின் ஊடாக அனுப்பினால் மாத்திரமே சாத்தியம். மாறாக கட்சி சார்பாக அனுப்பிவைக்கப்படும் ஆவணங்கள் உத்தியோகபூர்வமற்றவையாகக் கணிக்கப்படுவதால், கூட்டட்தொடரில் சேர்த்துக் கொள்வதற்காகப் பரிசீலிக்கப்படாது என்றார்.
இதன் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கட்சிகள் கால அவகாசம் முடிந்த பின்னரே ஐ.நா.வுக்கு கடிதம் அனுப்புவதாகக் கூறி தமிழ் மக்களை ஏமாற்றும் செயல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது என அவதானிகள் கூறுகின்றமை குறிப்பிடத்தக்கது.