இலங்கையில் பாரிய பஞ்சம் மற்றும் உணவுத்தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக சர்வதேச ஊடகங்களில் வெளியாகிய செய்திகளை விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே முற்றாக நிராகரித்துள்ளார்.
மேலும், உணவு உட்பட அத்தியாவசிய பொருட்கள் பதுக்கப்பட்டதன் காரணமாகவே பொருட்களுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்றைய தினம் தெரிவித்தார்.
நாட்டில் நிலவும் அத்தியாவசியப் பொருட்களின் நெருக்கடி குறித்து நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
அவசரகாலச் சட்டம் பற்றி பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. உலகச் செய்தி நிறுவனங்களாகிய அல்ஜஸீரா, பி.பி.சி செய்திகளிலும் இலங்கையில் பாரிய உணவுத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவற்றை நிர்வகிப்பதற்கே அவசரகாலச் சட்டத்தை அரசாங்கம் கொண்டுவருவதாகவும் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன் பின்னராக சதொச பல்பொருள் சந்தைகளில் மக்கள் நீண்டவரிசையில் இருந்த காட்சிகளையும் அந்த செய்திகளில் காணக்கூடியதாக இருந்தன.
எவ்வாறாயினும் இலங்கையில் எந்த வகையிலும் உணவுத்தட்டுப்பாடு ஏற்படவில்லை என்பதை தெரிவிக்க விரும்புகிறேன்.
இங்கு உணவுத்தட்டுப்பாடு இல்லை, மாறாக உணவு மாபியாதான் உள்ளது. அதனால் இந்த உணவுப்பதுக்கலை தடுப்பதற்கே அசர தலைவர் கோட்டாபய ராஜபக்ச அவசரகாலச் சட்டத்தை அறிவித்துள்ளார்.
இலங்கையில் உணவுத்தட்டுப்பாடு இல்லை என்பதை விவசாய அமைச்சராக தெரிவிக்க விரும்புகின்றேன்.
கடந்த போகத்தில் நாங்கள் 08 இலட்சம் மெற்றிக் தொன் நெல் விதைத்திருப்பதோடு, 5.3 மெற்றிக் தொன் அறுவடை செய்யப்பட்டுள்ளது.
எமது நாட்டில் அரிசி தட்டுப்பாடு இல்லை. இந்நாட்டு மக்களுக்கு உணவளிப்பதில் எந்த நெருக்கடியும் ஏற்படவில்லை. அனைத்து விவசாயிகளுக்கும் உற்பத்திகளை விற்பனை செய்வதற்கான சூழ்நிலை உருவாகியுள்ளது.
ஆகவே உணவுத்தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக வெளியான தகவல்களை நிராகரிக்கின்றோம்.
அரசாங்கம் இராணுவமயமாக்கலை தொடங்கியிருப்பதாக எதிர்கட்சிகள் விமர்சிக்கின்றன. கோட்டாபய ராஜபக்சவுக்கு இந்த நாட்டை இராணுவமயப்படுத்த வேண்டும் என்றால், கோவிட் தொற்றினால் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கின்ற நிலையில், 848 போராட்டங்களை எதிர்கட்சிகள் நடத்தி ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்களை வீதியிலிறக்கிய சந்தர்ப்பத்தில்கூட கண்ணீர்ப்புகை, பொல்லுகளைக் கொண்டு தாக்குதல் நடத்தவில்லை.அவற்றை செய்திருக்கலாம். கைதுகளையும் செய்திருக்கலாம்.
நியூஸிலாந்தில் போராட்டம் செய்தோர் மீது மிளகாய்த்தூள் தாக்குதலை நடத்தினார்கள். அன்று நாம் எதிர்கட்சியாக இருந்தபோது கித்துல் விதைகளை வைத்தே ரணில் தாக்குதல் நடத்தினார்- என மேலும் தெரிவித்தார்.