மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற இறைச்சிகளை வைத்திருந்த நபர்கள் கைது!
ஹொரவபதாணையில் அறுக்கப்பட்டு தெஹிவளைக்கு கொண்டுவரப்பட 6,000 கிலோ மாட்டிறைச்சியை விசேட அதிரடிப்படை கைப்பற்றியுள்ளனர்.
சுமார் 6 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள இந்த இறைச்சி மனித நுகர்வுக்கு பொருத்தமற்றது என பொது சுகாதார ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மொரட்டுவ விஷேட அதிரடிப்படை முகாமின் கீழ் இணைக்கப்பட்ட 3 விஷேட அதிரடிப்படை குழுவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று செவ்வாய்க்கிழமை (7) காலை இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.
கம்பஹாவிலிருந்து தெஹிவளைக்கு மாட்டிறைச்சியைக் கடத்தி வந்த இரண்டு லொறிகளும் தெஹிவளையில் வைத்து சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அறுக்கப்பட்ட மாடுகளின் சுமார் நாற்பது தலைகள் அந்த லொறிகளில் காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
பின்னர், பொது சுகாதார ஆய்வாளர்களை வரவழைத்து மாட்டிறைச்சி பரிசோதிக்கப்பட்டு பொது சுகாதார ஆய்வாளர்கள் இவை மனித பாவனைக்கு பொருத்தமற்றது என்று தெரிவித்தனர்.
இரண்டு லொறிகளும் மற்றும் லொறிகளின் சாரதிகளும் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக தெஹிவளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.