எதிர்வரும் மூன்று வருடங்களில் நாட்டிற்கு தேவையான மிளகாய், உருளைக்கிழங்கு, வெங்காயம் போன்றவற்றினை உற்பத்தி செய்வது தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, விவசாய அமைச்சர் மஹிந்தாநந்த அளுத்கமகே தெரிவித்தார்.
விவசாய திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
பல்வேறு செடிகளை தயாரித்துவிற்பனை செய்வதிலேயே விவசாய வேளாண்மை துறை அதிக கவனம் செலுத்தி வருகின்றது. இதன் விளைவாக நாட்டின் விவசாயம் பின்தங்கிய நிலையில் உள்ளது. இதனை மாற்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தொலைநோக்கு கொள்கையாக இருப்பது அனைத்து பயிர் பொருட்களையும் இறக்குமதி செய்யாமல் உள்நாட்டில் உற்பத்தி செய்ய வேண்டும் என்பதாகும்.
உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் மிளகாய் இறக்குமதி செய்வதால் அந்நிய செலாவணி அதிகமாக காணப்படுகின்றது.
அந்த பொருட்களை உள்நாட்டில் உற்பத்தி செய்தால் அந்த பணத்தை சேமித்து கொள்ளலாம். அதற்கு, நாம் அதிகமாக தனியார் முதலீட்டாளர்களை ஈடுபடுத்த வேண்டும். இதனால் உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் மிளகாய்களை உள்நாட்டில் உற்பத்தி செய்யும் இலக்கை அடைந்து கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.
நாட்டில் ஆண்டுதோறும் 500 தொன் மிளகாயும், 60 000 தொண் வெங்காயமும், 80 000 தொன் உருளைக்கிழங்கும் உற்பத்தி செய்யப்படுகின்றது.
அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் 100% மிளகாய், 60% வெங்காயம் மற்றும் 65% உருளைக்கிழங்கு நாட்டில் உற்பத்தி செய்யப்படும் எனவும் அதற்கான விதை உற்பத்தி நடவடிக்கைகள் ஆரம்பிக்கபட்டு விட்டதாகவும் தெரிவித்தார்.
இந்த மாத இறுதிக்குள் கூறப்பட்ட இலக்குகளை அடைய ஒரு நடைமுறைத் திட்டத்தை முன்வைத்து, ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்தத் திட்டத்தில் பங்கேற்கும் விவசாயிகள் மற்றும் அவர்களது நிலம் தொடர்பான அனைத்து தகவல்களையும் பெற்று ஒவ்வொரு மாவட்டத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த திட்டத்தை மேற்பார்வையிடுவதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில், பிரதம வேளாண்மை நிபுணர் ஏ.எல்.சிறிவர்தன, வேளாண்மை துணை இயக்குனர் எம்.சி. ஜெயசிங், துணை வேளாண்மை இயக்குனர், எஸ்.டி.குமார, வேளாண் துணை இயக்குனர், உலக வேளாண்மை நவீனமயமாக்கல் திட்ட இயக்குனர் டாக்டர் ரோஹன் விஜேகோ மற்றும் அமைச்சரின் ஆலோசகர் நீல் அல்விஸ் போன்றவர்கள் கலந்து கொண்டிருந்தனர்