நினைவேந்தல் நிகழ்வுகள், அரசுக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்றல் மற்றும் வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுதல் போன்றவற்றில் ஈடுபடும் தமிழ் இளைஞர் யுவதிகளை சிறிலங்கா காவல்துறையும் இராணுவமும் கடத்தி, சித்திரவதை செய்து பாலியல் பலாத்காரம் செய்து வருவதாக ஜெனிவாவில் நிகழ்ந்த மனித உரிமைகள் பேரவையின் செப்டம்பர் அமர்வில் வெளியிட்ட புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“ஜெனீவாவில் இலங்கையைப் பற்றி விவாதிக்கும் போது, பாதுகாப்புப் படையினரின் தொடர்ச்சியான சித்திரவதைகள் சர்வதேச சமூகத்தின் நிகழ்ச்சிநிரலில் முதன்மை பெறல் வேண்டும் – காணாமல் போனவர்களின் குடும்பங்கள் துன்புறுத்தப்படுவதாகச் சொன்னால் மட்டும் போதாது” என்று இன் நிர்வாக இயக்குனர் யஸ்மின் சூக்கா கூறினார்.
“இலங்கையில் அமைதியான முறையில் தங்கள் குடிமை உரிமைகளைப் பயன்படுத்தும் சிலர் கொடூரமாக தடுத்து வைக்கப்படுகின்றனர்,
சூடான உலோகக் கம்பிகள் மற்றும் சிகரெட்டுகளால் சூடுவைக்கப்படுகின்றனர் பெற்றோலில் நனைத்த பொலிதீன் பைகளுக்குள் முகத்தை திணித்து மூச்சுத்திணறடிக்க செய்யபடுகின்றனர். பின்னர் பாதுகாப்புப் படையினரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்படுகின்றனர்”.
ITJP இன் சர்வதேச விசாரணையாளர்கள், தற்போது இங்கிலாந்தில் உள்ள 15 தமிழர்களிடமிருந்து விரிவான அறிக்கைகளை பதிவு செய்தனர். அவர்கள் 2019 நவம்பரில் கோட்டாபய ராஜபக்சே ஆட்சிக்கு வந்த பின்னர் கடத்தப்பட்டு சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளானவர்கள்.
இதில் அதிகமானவர்கள் இந்த ஆண்டு நிகழ்ந்த பொத்துவில் முதல் பொலிகண்டி வரை (P2P)போராட்டத்தில் பங்கேற்றவர்கள். மேலும் சிலர் இறந்தவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வுகள் மற்றும் காணாமல் போனவர்களுக்கான போராட்டங்களில் பங்கேற்றவர்கள். இன்னும் பலர் தமிழ் அரசியல் கட்சிகளுக்கு தன்னார்வலர்களாக பணியாற்றியவர்கள்.
வெள்ளை வான்களில் தாங்கள் கடத்தப்பட்டதாக அறுவர் விவரித்தனர்.இம்முறையே கைது மற்றும் கடத்தலுக்கு படையினர் பல தசாப்தமாக பயன்படுத்திவந்துள்ளனர். அவர்கள் சித்திரவதைக்கென விசேடமாக தயாரான அறைகளில் முட்டு காலில் பெரும்பாலும் உள்ளாடைகளுடன் நிற்க வைக்கப்பட்டு கொடூரமான சித்திரவதைகளுக்கு மீண்டும் மீண்டும் உள்ளாக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
ஏறக்குறைய அனைவரும் இனவெறி வார்த்தைகளால் துஷ்பிரயோகப்படுத்தப்பட்ட அதே வேளையில் பாலியல் வல்லுறவுக்கும்
ஆளாக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் காயங்களுடன் இரத்தம் சொட்ட சொட்ட தரையில் இருட்டில் நிர்வாணமாக வைக்கப்பட்டனர். அவர்களின் உள்ளாடைகள் மட்டுமே இரத்தத்தையும் விந்தணுக்களையும் துடைக்க எஞ்சின.
பயங்கரவாத தடுப்பு புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்ட இரண்டு நபர்கள் தாம் மலவாசல் மூலமான பாலியல் வன்புணர்வுக்கு உள்ளானதாகவும் உலோகக் கம்பியை மலவாசலில் புகுத்தி கொடுமைப்படுத்தபட்டதாகவும் வாக்குமூலம் அளித்தனர்.
எல்லா சந்தர்ப்பங்களிலும் குடும்பங்கள் தங்கள் பிள்ளைகளின் விடுதலைக்காக லஞ்சம் கொடுத்தன. விசாரணை செய்யப்பட்டவர்கள் பல வாரங்களாக மலைகளை கடந்து நடந்து வாகனங்களின் பிற்புறம் மறைந்திருந்து ஆங்கில கால்வாயினை ரப்பர் வள்ளங்களில் கடந்து அசாதாரணமான பயணங்களை மேற்கொண்டு இங்கிலாந்து வந்துள்ளனர். இங்கிலாந்தில் வந்த பிறகு கூட வெளிப்படையான உடற்காயங்களுடனும் மாறாத மன வடுக்களுடனும் இருந்த ஆறு பேர்தற்கொலைக்கு முயன்றுள்ளனர் .
சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறைகளைச் செய்தவர்களில் மோசமான பயங்கரவாத தடுப்பு பொலிஸ் பிரிவுடன் சீருடையில் இருந்த இலங்கை இராணுவ அதிகாரிகளும் அடங்குவர். பாதிக்கப்பட்டவர்களில் இருவர் கடந்த ஆண்டு எந்த காவல் நிலையத்தில் தாங்கள் சித்திரவதை செய்யப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர் என்பதை நினைவில் வைத்திருக்கின்றனர். அதில் ஒருவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட நிலையத்தின் பின்புறத்தில் உள்ள கட்டிடங்களின் வரைபடத்தை கூட வரைந்து காட்டினார்.
“இது முறையான தண்டனையின்மையின் அசிங்கமான முகம். 1987-90இல் ஜேவிபி மீதான வன்முறை மற்றும் கடந்த நான்கு தசாப்தங்களாக தமிழர்களுக்கு எதிரான அரச வன்முறைக்கு பொறுப்பானவர்கள் மீது அடுத்தடுத்த அரசாங்கங்கள் வழக்குத்தொடரத் தவறியதால் அந்த குற்றவாளிகள் பொறுப்பைத் தவிர்த்து காவல்துறை மற்றும் இராணுவத்தின் உயர் பதவிகளில் இலகுவாய் அமர முடிந்தது. இப்போது
இந்த கட்டமைப்பு பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டின் மூலம் தன்னை சீர்திருத்துவதாக எதிர்பார்ப்பது நகைப்புக்குரியது” என்று திருமதி சூகா கருத்து தெரிவித்தார்.
“கொடூர குற்றங்களுக்கு இலங்கை அரசு தண்டனை வழங்கவில்லை.குற்றவியல் பொறுப்புக்கூறல் இல்லாமல் கொடூர குற்றங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க எந்த ஊக்கமும் கிடைக்க போவது இல்லை. சர்வதேச சமூகம் அனைத்து சர்வதேச பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு திட்டங்களை ரத்து செய்ய வேண்டும் காரணம் அவை பயனளிக்கப் போவதில்லை.
யுத்தம் முடிவடைந்த பின்னர் பல வருடங்களாக மாறியது பாதிக்கப்பட்டவர்களின் தன்மை மட்டுமே. அவர்களில் சிலர் முன்னாள் புலிகள் அல்லது முக்கிய மனித உரிமை ஆர்வலர்கள் என்று கூறுகிறது. ஜே.வி.பி காலத்தில் பாதிக்கப்பட்டவர்களைப் போலவே கடைக்காரர்கள், மின்தொழிலாளர்கள்,விவசாயிகள், தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்களமற்றும் மாணவர்களே இவர்களின் பார்வைக்கு ஆளாகின்றனர்.