மேம்பட்ட இருதரப்பு வர்த்தகம், முதலீடு, சுற்றுலா மற்றும் ஆற்றல் உள்ளடங்கலான ஒத்துழைப்புக்கான சாத்தியக்கூறுகள் உள்ள புதிய துறைகளில் ஈரானுடனான அதிகரித்த பொருளாதார ஒத்துழைப்பை வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் நாடினார்.
ஈரான் இஸ்லாமியக் குடியரசின் தூதுவர் ஹாஷேம் அஷ்ஜஸாதே வெளிநாட்டு அமைச்சில் வைத்து நேற்றைய தினம் (2021 செப்டம்பர் 08) சந்தித்த போதே அமைச்சர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.
தனது ஆரம்ப உரையில், இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவுகளை வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் எடுத்துரைத்தார்.
அண்மைய ஆண்டுகளில், உயர்மட்ட விஜயங்களை பரிமாறிக்கொள்வதன் மூலம் இருதரப்பு மட்டத்திலும் சர்வதேச அரங்கிலும் நெருக்கமான ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்புக்கு இருதரப்பு உறவுகள் பங்களித்தன.
ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகள் மற்றும் ஏனைய பல்தரப்பட்ட அரங்குகளில் ஈரான் இஸ்லாமியக் குடியரசு நல்கிய உறுதியான ஆதரவுகளுக்கான இலங்கை அரசாங்கத்தின் பாராட்டுக்களை வெளிநாட்டு அமைச்சர் தெரிவித்தார்.
வெளிநாட்டு அமைச்சராகப் பதவியேற்ற அமைச்சர் பீரிஸுக்கு தூதுவர் அஷ்ஜஸாதே தனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், இலங்கை அரசாங்கத்துடன் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான ஈரான் அரசாங்கத்தின் உறுதியான அர்ப்பணிப்பையும் ஆதரவையும் உறுதியளித்தார்.






