துக்ளக் தர்பார் திரைப்படம் எப்படி இருக்கு?

நடிகர்-விஜய் சேதுபதி
நடிகை-ராஷி கண்ணா
இயக்குனர்-டெல்லி பிரசாத் தீனதயாளன்
இசை-கோவிந்த் வசந்தா
ஓளிப்பதிவு-மனோஜ் பரமஹம்சா

சிறுவயதில் தாய், தந்தையை இழந்த விஜய் சேதுபதி, தனது தங்கை மஞ்சிமா மோகனுடன் வாழ்ந்து வருகிறார். அரசியலில் ஆர்வம் கொண்ட விஜய் சேதுபதி, பார்த்திபன் இருக்கும் கட்சியில் தொண்டனாக நுழைகிறார்.

பின்னர் சூழ்ச்சி செய்து கவுன்சிலர் வேட்பாளராக களம் இறங்கி வெற்றி பெறுகிறார். மேலும் தான் வெற்றி பெற்ற தொகுதியை பார்த்திபன் மூலம் ரூ.50 கோடிக்கு கார்ப்பரேட் கம்பெனிக்கு விற்று விடுகிறார். இதற்கிடையில் ஒரு சண்டையில் விஜய் சேதுபதிக்கு மண்டையில் அடிப்பட்டு வித்தியாசமாக நடந்து கொள்கிறார்.

இதனால் விஜய் சேதுபதி வாழ்க்கையில் பிரச்சனை ஏற்படுகிறது. அதேசமயம் ரூ 50 கோடி பணம் காணாமல் போகிறது. இதனால் கோபமடையும் பார்த்திபன், விஜய் சேதுபதியை பழிவாங்க நினைக்கிறார். இறுதியில் ரூ.50 கோடி கிடைத்ததா? யார் கொள்ளை அடித்தது? விஜய் சேதுபதி வித்தியாசமாக நடந்து கொள்ள காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் விஜய் சேதுபதி, 2 வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருக்கிறார். 2 கதாபாத்திரத்திற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. எந்த விஜய் சேதுபதியாக தற்போது இருக்கிறார் என்ற குழப்பம் ஏற்படுகிறது. ஒரு சில இடங்களில் ‘பீட்சா’ விஜய் சேதுபதி வந்து செல்கிறார். மேலும் நடிப்பில் அந்நியன் விக்ரம், அமைதிப்படை சத்யராஜ் ஆகியோரை ஞாபகப்படுத்துகிறார்.

கதாநாயகியாக வரும் ராஷி கண்ணாவிற்கு அதிகம் வேலை இல்லை. அழகாக வந்து செல்கிறார். தங்கையாக வரும் மஞ்சிமா மோகன், நடிக்க வாய்ப்பு குறைவு. வசனம் இல்லாமல் மௌனத்தில் அதிகம் பேசி இருக்கிறார். தனக்கே உரிய நக்கல் நையாண்டியுடன் நடித்து அசத்தி இருக்கிறார் பார்த்திபன். கிளைமாக்ஸ் காட்சியில் வரும் சத்யராஜ், ஓட்டு மொத்த கைத்தட்டலை தட்டிச் செல்கிறார். கருணாகரனின் நடிப்பு படத்திற்கு பலம்.

அரசியல் ஃபேன்டசி படத்தை கொடுக்க முயற்சி செய்து இருக்கிறார் இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாள். அதிக வித்தியாசம் இல்லாத விஜய் சேதுபதியின் 2 கதாபாத்திரம். ஏற்கனவே பார்த்த படங்களின் சாயல் ஆகியவை படத்திற்கு பலவீனம்.

அதிகமான லாஜிக் மீறல்களை தவிர்த்து இருக்கலாம். ‘வாவ்’ என்று ஆரம்பிக்கும் திரைக்கதை, மெல்ல மெல்ல ‘ச்சே’ எதை நோக்கி செல்கிறது என்ற உணர்வு ஏற்படுகிறது. சத்யராஜ்க்கு இன்னும் அதிக காட்சிகள் வைத்திருந்தால் ரசித்து இருக்கலாம்.

கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் பெரியதாக கவரவில்லை. மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு சிறப்பு.

மொத்தத்தில் ‘துக்ளக் தர்பார்’… கொஞ்சம் BORE..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *