துரோக நடவடிக்கைகளுக்கு மலையகத்தில் உள்ள ஆளும் கட்சியும் துணை- எம்.உதயகுமார்

” மலையக பெருந்தோட்ட மக்களுக்கு வலிகளை கொடுத்துவிட்டு, அந்த வலியில் இன்பம் காண்கின்றது தற்போதைய அரசாங்கம். இவ்வாறான துரோக நடவடிக்கைகளுக்கு மலையகத்தில் உள்ள ஆளும் கட்சியும் துணை நிற்கின்றது.” – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம். உதயகுமார் தெரிவித்தார்.

கொரோனா வைரஸின் தாக்கத்தை கருத்திற் கொண்டு டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு ஒரு தொகை சுவாச கருவிகள் மற்றும் முகக்கவசங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.உதயகுமாரின் சொந்த நிதியின் கீழ் இவ் பொருட்கள் வைத்தியசாலைக்கு 11.09.2021 அன்று வழங்கப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் எம்.உதயகுமாரின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முன்னாள் மத்திய மாகாண உறுப்பினரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளருமான சோ.ஸ்ரீதரன் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் உட்பட வைத்தியசாலையின் சார்பாக மாவட்ட உதவி வைத்திய அதிகாரி ஜே.அருள்குமரன் வைத்தியசாலையின் நிர்வாக உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிகழ்வில் கலந்து கொண்டதன் பின் ஊடகவியாலளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

” நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. மேலும் பல பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகின்றது. இந்நிலையில் மக்களை மேலும் சிக்கலுக்குள் தள்ளும் வகையில் வர்த்தமானி அறிவித்தல்களும் வெளிவருகின்றன. இந்த அரசாங்கத்திடம் தெளிவான கொள்கை இல்லை. அதனால் தான் மாறி, மாறி வர்த்தமானி அறிவித்தல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன.

மக்களுக்கு இன்று வருமானம் இல்லை. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. சீனி விலை அதிகரிப்பு, கோதுமைமாவின் விலை அதிகரிப்பு என மக்களை படுபாதாளத்துக்குள் தள்ளும் வகையிலேயே விலை அதிகரிப்புகள் இடம்பெறுகின்றன. மேலும் 623 இற்கும் மேற்பட்ட பொருட்களுக்கு இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் மேலும் பாதிக்கக்கூடும். நுவரெலியாவில் மரக்கறி உற்பத்தி செய்யப்பகின்றது. ஆனால் இங்கு மரக்கறி வகைகளின் விலைகள் அதிகம்.

மலையக பெருந்தோட்ட பகுதிகளிலுள்ள காணிகள் தனியார் நிறுவனங்களுக்கு விற்கப்படும் என நாம் அன்று குறிப்பிட்டோம். இன்று விற்கப்படுகின்றது. பால் பண்ணை என கூறியே விற்கப்படுகின்றது. பால் பண்ணை அமைப்பதற்கு பல பகுதிகள் உள்ளன. அப்படி இருந்தும் மலையகம் தேர்ந்தெடுக்கப்பட்டதன் நோக்கம் என்ன? எமது மக்களை காணி உரிமையற்றவர்களாக்குவதே இதன் நோக்கம். இந்த துரோகத்துக்கு மலையகத்தில் உள்ள ஆளும் கட்சியும் துணை நிற்கின்றது. தோட்ட உட்கட்டமைப்பு பிரதமர் வசம் இருக்கின்றது. அதன்மூலம் உரிமைகள் வென்றெடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் கூறினார். ஆனால் இன்று என்ன நடக்கின்றது? உரிமைகள் பறிக்கப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *