
கிழக்கில் இருந்து மாலைதீவுக்கு மணல் ஏற்றுமதி ;
சாணக்கியனின் குற்றச்சாட்டு:
சுயாதீன விசாணைக்கு
கிழக்கு ஆளுநர் உத்தரவு
* உடன் விசாரணை நடத்தி அறிக்கையை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க உத்தரவு

(கனகராசா சரவணன்)
கிழக்கு மாகாணத்தில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அண்மையில் நாடாளுமன்றத்தில் முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பாக சுயாதீன விசாரணையை மேற்கொள்ளுமாறு கிழக்கு பிராந்திய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் பணிப்புரை விடுத்துள்ளார்.
கடந்த 7ஆம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றிய,தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மாலைதீவில், தீவொன்றை அமைப்பதற்காக,கிழக்கு மாகாணத்தில் இருந்து மணல் அகழப்பட்டு, லொரிகளில் எடுத்துச் செல்ல படுவதாகவும், அதற்கு,சிறிலங்கா சுதந்திர கட்சி அமைச்சர் ஒருவரும், கிழக்கு மாகாண ஆளுநரும் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த நிலையில், மாலைதீவில் உள்ள தீவை நிரப்புவதற்கு இலங்கையில் இருந்து மணல் அனுப்பப்பட்டுள்ளமை நிரூபிக்கப்படுமாக இருந்தால், அமைச்சுப் பதவியில் இருந்து மாத்திரம் அல்ல, பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும் தான் பதவி விலகுவதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர ஊடகங்கள் மூலமாக தெரிவித்தார்.
இவ்வாறான நிலையில், கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் நேற்று வெள்ளிக்கிழமை (10) பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் நாடாளுமன்றத்தில் முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பாக சுயாதீன விசாரணையை மேற்கொள்ளுமாறு, கிழக்கு பிராந்திய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எல்.கே.டபிள்யூ.கே. சில்வாவிற்கு பணிப்புரை விடுத்துள்ளதுடன், இந்த விசாரணைகளை மிக விரைவாக மேற்கொண்டு, அதுதொடர்பான அறிக்கையை ஜனாதிபதிக்கு கையளிக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.
இது தொடர்பான விசாரணைக்கான குழு நியமிக்கப்பட்டு, விசாணை மேற்கொள்ள கிழக்கு பிராந்திய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நடவடிக்கை எடுத்துவருகின்றார்.
அதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவான்கரையான கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள பகுதிகளில், இந்த மணல் அகழ்வு இடம்பெற்று வருவதுடன், நாள் ஒன்றிற்கு 400 லோட் மணல் அகழ்ந்து 9 வீதிகள் ஊடாக வெளியிடங்களுக்கு கொண்டு செல்லப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த மணல் அகழ்வை வாழ்வாதார தொழிலாக பலர் மேற்கொண்டு வருவதுடன்,சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டோர் மீது விசேட அதிரடிப்படையினரும் இராணுவம்,மற்றும் பொலிசார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு உயிரிந்த சம்பவங்களும் பதிவாகியுள்ளன.