
தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் மோதல், அதிலிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள திமுக சார்புநிலை, சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆதரவு பிரச்சாரம் என வடிவேலு தடுமாறியது அவரது திரையுலக வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக முடக்கிப்போட்டது.
இதுபோன்றதொரு நிலை மறைந்த நடிகை மனோராமாவுக்கு ஏற்பட்டபோது அவர் கடுமையாக நாலாந்தர வார்த்தைகளால் தேர்தல் பிரசாரத்தின்போது திட்டிய ரஜினிகாந்த் தனது படத்தில் மனோரமாவுக்கு வாய்ப்பு கொடுத்து தேக்கநிலையை நீர்த்துப்போக செய்தார்.
ஆனால், அதுபோன்று ஆபத்பாந்தவான் வடிவேலுக்குக் கிடைக்கவில்லை. இயக்குநர் ஷங்கருடன் நான் யார் தெரியுமா என வாய் சவடால் பேசி வம்பிழுத்ததன் காரணமாக புதிய படங்களில் நடிக்க அவருக்கு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தடை விதித்தது.
லைகா நிறுவன உரிமையாளர் சுபாஷ்கரண் வடிவேலுவை இக்கட்டில் இருந்து கொண்டுவரும் முயற்சியை மேற்கொண்டு ஷங்கருடன் வடிவேலுக்கு இருந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.
உண்மையில் வடிவேலுவை நாயகனாக அல்லது காமெடியனாக ஒப்பந்தம் செய்ய தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் தயாராக இல்லை. இதற்கும் முடிவு காணும் வகையில் வடிவேலு நடிக்கும் முதல் இரண்டு படங்களைத் தயாரிக்க உள்ளது லைகா நிறுவனம். இதற்குப் பிறகு வடிவேலு நடிக்க வருகிறார். அவர் கதாநாயகனாக நடிக்கவிருக்கும் படத்தை சுராஜ் இயக்குகிறார்.
அந்தப் படத்துக்கு நாய் சேகர் என்று பெயர் வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். அதேநேரம், நகைச்சுவை நடிகர் சதீஷ் கதையின் நாயகனாகவும் ‘குக் வித் கோமாளி’ உள்ளிட்ட சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மனம் கவர்ந்த பவித்ரா லட்சுமி கதாநாயகியாகவும் நடிக்கும் புதிய படமொன்று தயாராகியுள்ளது.
அந்தப் படத்தில், ஜார்ஜ் மரியன், இசையமைப்பாளர் சங்கர் கணேஷ், இளவரசு, லிவிங்ஸ்டன், ஞானசம்பந்தன் மற்றும் ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
பல குறும்படங்கள் மற்றும் விளம்பரப் படங்களை இயக்கியவரும், யார்க்கர் ஃபிலிம்ஸ் எனும் யூடியூப் சேனலை நடத்தி வருபவருமான கிஷோர் ராஜ்குமார் இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனங்களை எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார்.
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்டின் 21ஆவது படைப்பாகத் தயாராகியுள்ளது. இந்தப் படத்தின் பெயர் நாய் சேகர்.
படப்பிடிப்பை முழுமையாக முடித்துவிட்டு படத்தின் விளம்பரங்களைத் தொடங்கும்போது பெயரை அறிவிக்கலாம் என்று படக்குழுவினர் இருந்துள்ளனர்.
இந்த நிலையில்தான், என்னுடைய அடுத்த படம் நாய் சேகர் என்று வடிவேலு பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார். ஆனால், இந்தப் படத்தின் பெயரை முறைப்படி பதிவு செய்து படத்தைத் தயாரித்திருக்கிறது ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம்.
அவர்களிடம் இந்தப் பெயர் இருப்பதை அறிந்த வடிவேலு, இந்தப் பெயரை என் படத்துக்காக விட்டுக்கொடுங்கள் என்று கேட்டிருக்கிறார். ஆனால், அந்தப் படத்தின் கதைப்படி பெயர் முக்கியமானதாக இருக்கிறது என்பதை ஏஜிஎஸ் நிறுவனம் சொல்லிவிட்டதாம்.
எப்படியெனில்? படத்தில் ஒரு நாய் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறது என்கிறார்கள்.
அதன் பின்னும், நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் என்னுடைய அடுத்த படத்தின் பெயர் நாய் சேகர், இந்தப் பெயரைப் பதிவு செய்து வைத்திருப்பதாகச் சொல்லப்படும் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடக்கிறது. அந்தப் பெயர் எங்களுக்கே கிடைக்கும் என்று சுராஜ் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் சொல்கிறார்.
இதுகுறித்து சதீஷ் படக்குழு தரப்பில் விசாரித்தால், இந்தப் பெயர் எங்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை அவர்களிடம் சொல்லி வடிவமைப்பைக் கூடக் காட்டிவிட்டோம். அதன் பின்பும் அவர்கள் ஏன் இப்படிச் சொல்கிறார்கள் எனத் தெரியவில்லை.
இதில் இன்னொரு முக்கிய செய்தி என்னவென்றால், இந்தப் பெயரை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம்தான் பதிவு செய்து வைத்திருந்தது. அவர்களிடமிருந்துதான் நாங்கள் இந்தப் பெயரை வாங்கியிருக்கிறோம்.
அப்படியிருக்கும்போது இன்னொருவருக்கு எப்படி நாங்கள் தர முடியும்? அதனால் இந்தப் பெயரை நாங்கள்தாம் வைக்க வேண்டும். அப்படியே இல்லையென்றாலும் நாங்கள் ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்திடம்தான் திருப்பிக் கொடுத்தாக வேண்டும் என்கிறார்கள்.