கொரோனாவுக்குப் பின் என்ன சாப்பிடலாம்?

கொரோனா பரவல் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன.

உதாரணத்துக்கு, ‘கொரோனாவிலிருந்து குணமாகி திரும்பியிருக்கிறேன். என் டயட்டை மாற்றியமைப்பதன் மூலம் மீண்டும் பழைய புத்துணர்ச்சியைப் பெற முடியுமா? மீண்டும் முழு ஆரோக்கியம் பெற என் டயட்டில் என்ன மாற்றங்களைச் செய்யலாம்?’ என்பது ஒன்று. இந்த சந்தேகத்துக்கான தீர்வு இதோ…

“இப்போதுதான் கொரோனாவிலிருந்து மீண்டிருக்கிறீர்கள் என்றால் உடல் சோர்வு, அசதி, வாயில் கசப்புத்தன்மை, சுவை மற்றும் வாசனையை உணர முடியாதது போன்ற பிரச்னைகள் இருக்கலாம்.

சுவையும் மணமும் இல்லாததால் நீங்கள் உட்கொள்ளும் உணவின் அளவும் குறையும். புரதச்சத்துள்ள பருப்பு வகைகள், முழு பருப்பு வகைகளைச் சேர்ந்த கொண்டைக்கடலை, பட்டாணி, ராஜ்மா போன்றவற்றை சுண்டலாகச் செய்து மதிய உணவின் போது எடுத்துக்கொள்ளலாம். இதன் மூலம் உடல் எடையை பேலன்ஸ் செய்யவும், தசையிழப்பு ஏற்படாமலும் பார்த்துக்கொள்ள முடியும்.

இரவில் எளிதில் ஜீரணமாகக்கூடிய, ஆவியில் வேகவைத்த அல்லது நன்கு வேகவைத்த இட்லி, இடியாப்பம், பொங்கல், கிச்சடி போன்றவற்றைச் சாப்பிடலாம். வைட்டமின் சி சத்து நிரம்பிய நெல்லிக்காய், ஆரஞ்சு, சாத்துக்குடி, கொய்யா போன்றவற்றைச் சாப்பிடுவதன் மூலம் தலைவலி மற்றும் சோர்விலிருந்து விடுபடலாம்.

துளசி, உலர்ந்த திராட்சை, சுக்கு, நெல்லிக்காய் சேர்த்துக் கொதிக்கவைத்த நீர் குடிக்கலாம். இரண்டு, மூன்று பழங்கள் சேர்த்து அரைத்து, அதை வடிகட்டாமல் ஸ்மூத்தி போன்று குடிக்கலாம். இதன் மூலம் உடலில் நீர்வறட்சி ஏற்படாமல் பார்த்துக்கொள்ள முடியும்.

மோர், மஞ்சள்தூள் சேர்த்த பால், புழுங்கலரிசி கஞ்சி, ராகி கஞ்சி போன்றவற்றை உணவு இடைவேளையில் அடிக்கடி சேர்த்துக்கொள்ளலாம். திரவ உணவுகள் எளிதில் செரிமானமாகும். தவிர நோயிலிருந்து மீண்ட நிலையில் நீங்கள் குறைவாக உணவு எடுத்துக்கொள்வதையும் இந்த உணவுகள் ஈடுகட்டும்.

முட்டை, சிக்கன் சூப், வேகவைத்த, மசாலா சேர்க்காத சிக்கன் மற்றும் வேகவைத்த அல்லது க்ரில் செய்யப்பட்ட மீன் ஆகியவற்றை வாரத்தில் மூன்று நாள்கள் சேர்த்துக்கொள்ளலாம்.

வைட்டமின்கள் நிறைந்த பழங்கள், நன்கு வேகவைத்த காய்கறிகளை நிறைய சேர்த்துக் கொள்ளவும். இப்படி உங்கள் உணவுமுறையை மாற்றிக்கொண்டால், சோர்வும் பலவீனமும் நீங்கிப் புத்துணர்வு திரும்பும்” என்கிறார் ஊட்டச்சத்து ஆலோசகர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *