அவசரகால சட்டத்தின் கீழ், அரசாங்கம் மக்களை அடக்கும் சரத்துக்களை கொண்டு வருமாக இருந்தால், அதற்கெதிராக நீதிமன்றத்தை நாட தாம் தயார் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கின்றார்.
மேலும் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன், ZOOM தொழில்நுட்பத்தின் ஊடாக கலந்துரையாடல்களை நடத்திய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அத்தோடு அவசரகால சட்டத்தின் கீழ், அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படுமாக இருந்தால், அதில் தமக்கு பிரச்சினை கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த சட்டத்தின் கீழ் மக்களுக்கு குறைந்த விலையில் பொருட்கள் விநியோகிக்கப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்தோடு அரிசி தவிர்ந்த ஏனைய அனைத்து பொருட்களும் இறக்குமதி செய்யப்படுவதாக சுட்டிக்காட்டிய அவர், பொருட்களை இறக்குமதி செய்ய வர்த்தகர்களிடம் தற்போது பணம் கிடையாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இந்த நிலையில், நாட்டின் பொருளாதாரம் நாளுக்கு நாள் மிக மோசமடைந்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.