அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைத்திய நிபுணர் பி.கே. ரவீந்திரனுக்கு பிரியாவிடை நிகழ்வு

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைத்திய நிபுணர் பி.கே. ரவீந்திரனுக்கு பிரியாவிடை நிகழ்வு

வி.சுகிர்தகுமார்

அரச உத்தியோகத்தர்களின் இடமாற்றமும், ஓய்வும் தவிர்க்க முடியாதது என்பதை நாம் அறிவோம்.
ஆனாலும் சிலரது இடமாற்றங்களும், ஓய்வும் ஏற்க முடியாததாகவும் மறக்க முடியாததாகவும் அமைந்து விடுகின்றது.

இதற்கு காரணம் அவர்களது சேவைக்காலத்தில் ஆற்றிய பணிகளும் அதனையும் தாண்டி சமூகத்தின் மீது அவர்கள் வைத்திருந்த பற்றும் என்பதும் மறுக்க முடியாது.

அவ்வாறு அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் 5 வருடங்கள் பொது சத்திர சிகிச்சை நிபுணராக சேவையாற்றி சிலாபம் ஆதார வைத்தியசாலைக்கு இடமாற்றம் பெற்றுச் செல்லும் சிறந்த மனிதாபிமானமுள்ள வைத்திய சிகிச்சை நிபுணர் பி.கே. ரவீந்திரன் அவர்களின் இடமாற்றம் மறக்க முடியாத ஒன்றாக அமைந்துள்ளது. சேவை அளப்பரியது.

அக்கரப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு கடந்த ஜந்து வருடங்களுக்கு முன்னர் இடமாற்றம் பெற்று வந்த அவர் வைத்திய துறை மாத்திரமன்றி சமூக பணியிலும் தன்னை இணைந்து கொண்டு பல்வேறு உதவித்திட்டங்களையும் நமது பிரதேசத்தில் முன்னெடுத்திருந்தார்.
மேலும் விபுலானந்தா சிறுவர் அபிவிருத்தி நிலையம் உள்ளிட்ட பல இல்லங்களுக்கும் பாலர் பாடசாலைகள் மற்றும் கல்வி அபிவிருத்தி செயற்பாடுகளுக்கும் உதவி புரிந்து உறுதுணையாக நின்றார்.
இவ்வாறான சமூக சிந்தனையுள்ள ஒரு நல்ல மனிதரை
கௌரவிக்கும் நிகழ்வும் பிரியாவிடை வைபவமும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்றது.

வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் எம்.எச்.எம்.அசாத் தலைமையில் இடம்பெற்ற கௌரவிப்பு நிகழ்வில் வைத்தியர்கள் உத்தியோகத்தர்கள் சுகாதாரத்துறை ஊழியர்கள் என சிலர் கலந்து கொண்டனர்.

சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இடம்பெற்ற நிகழ்வில் வைத்திய சிகிச்சை நிபுணர் பி.கே. ரவீந்திரன் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்க்கப்பட்டாhர். தொடர்ந்து இறைவணக்கத்துடனும் வரவேற்பு மற்றும் தலைமையுரையுடனும் இடம்பெற்ற நிகழ்வில் அவர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் பொன்மனச் செம்மல் எனும் தலைப்பிலான வைத்தியரின் சேவை தொடர்பான காணொளியும் காண்பிக்கப்பட்டது.

இதன் பின்னராக பலரும் அவரது சேவை தொடர்பில் பாராட்டி பேசியதுடன் வாழ்த்துப்பா உள்ளிட்ட நினைவுப்பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.

நிறைவாக வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் எம்.எச்.எம்.அசாத் உரையாற்றியதுடன் தங்கப்பதக்கம் ஒன்றினையும் அணிவித்தார். இதன் பின்னராக வைத்திய சிகிச்சை நிபுணர் பி.கே. ரவீந்திரனால் ஏற்புரை இடம்பெற்றதுடன் நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவுற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *