
கிழக்கில் மூடப்பட்ட லங்கா சதோச கிளைகள் மீளவும் திறக்கப்படுமா?
மக்கள் அங்கலாய்ப்பு

ஏ .எல். எம். சலீம்
“கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டவில்லை” என்பது நம் பிரதேச பேச்சு வழக்கில் உள்ள ஒரு பழமொழி.
தற்போதைய கொரோனா தனிமைப்படுத்தல் காலத்தில் மக்களுக்கு பெரும் சேவையாற்றி வரும் லங்கா சதோச கிளைகள் குறித்து, கிழக்கின் பல தமிழ், முஸ்லிம் பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் மேற்படி பழமொழியையே கூறும் நிலையில் உள்ளனர்.
இந்த இடர்காலத்தில், வெளிச்சந்தையில் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு, விலையேற்றம்,பதுக்கல் போன்றவற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டு வரும் மக்களை,ஓரளவேனும் லங்கா சதோச கிளைகள் கைதூக்கி விடுகின்றன.
அத்தியாவசிய தேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள லங்கா சதோச மூலம், அரசின் நிர்ணயிக்கப்பட்ட விலைகளிலும் தட்டுப்பாடின்றியும் அத்தியாவசியப் பொருட்களை பொதுமக்கள் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது.
ஆனாலும், இந்த சேவையையும் வாய்ப்பையும் தமது பிரதேசங்களிலேயே பெற்றுக்கொள்ள தக்க வாய்ப்பின்றி, கிழக்கில் பல பிரதேச தமிழ்,முஸ்லிம் மக்களும் துரதிஷ்ட நிலையில் உள்ளனர்.
அவர்கள் கைக்கெட்டியும் வாய்க்கெட்டாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தமது பிரதேசங்களில் இயங்கிய லங்கா சதோச கிளைகளை இன்றைய அரசு இழுத்து மூடிவிட்டதால், அதன் பயனைப் பெற முடியாது மக்கள் திண்டாடி வருகின்றனர்.
கடந்த நல்லாட்சி அரசில் மக்கள் நலன் கருதி திறக்கப்பட்ட, புனரமைக்கப்பட்ட பல சதோச கிளைகள் அம்பாறை, மட்டக்களப்பு,திருகோணமலை மாவட்டங்களில் இந்த அரசாங்கத்தினால் மூடப்பட்டிருக்கின்றன.
இந்த மாவட்டங்களில் சதோச கிளைகள் மூலம் பயன் பெற்று வந்த தமிழ், முஸ்லிம் மக்களின் வயிற்றில் இதன் மூலம் பெரும் அடி விழுந்திருக்கிறது.
குறிப்பாக, அம்பாரை மாவட்டத்தில் சுமார் 15 வருடங்களுக்கு மேல் இயங்கிவந்த நிந்தவூர் லங்கா சதோச கிளை உட்பட அட்டாளைச்சேனை, பாலமுனை,சென்றல் கேம்ப், சாய்ந்தமருது,மருதமுனை,நட்பிட்டிமுனை ஆகிய பிரதேசங்களில் சேவையாற்றி வந்த கிளைகளும்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கி வந்த காத்தான்குடி,களுவாஞ்சிகுடி, கொக்கட்டிச்சோலை, கிளைகளும் திருகோணமலை மாவட்டத்தில் சேவையாற்றி வந்த மூதூர்,புல்மோட்டை, முள்ளிப்பொத்தானை கிளைகளும் இவ்வாறு இன்றைய ஆட்சியாளர்களால் இழுத்து மூடப்பட்டன.
2020 பிப்ரவரி மாதம் இருபத்தி ஒன்பதாம் நாளுடன் இந்த கிளைகளின் கையிருப்பைக் கணக்கெடுக்குமாறு பணித்த லங்கா சதோச தலைமையகம், அதிரடியாக அடுத்த நாளுடன் வியாபார நடவடிக்கைகளை நிறுத்துமாறு பணித்ததுடன், கிளைகளை இழுத்து மூடியது.
ஆனால், இவ்வாறு மூடப்பட்ட அம்பாறை மாவட்டத்தின் பெல்வத்தை, அம்பாரை (இரண்டு ) சென்றல் கேம்ப் கிளைகள் ஒரு மாத காலத்திற்குள் மீள திறக்கப்பட்ட விந்தையும் நிகழ்ந்திருக்கிறது.
மூடப்பட்ட மேற்படி கிளைகளில் வியாபாரம் போதிய அளவு இல்லை; நஷ்டத்தில் இயங்கி வருவதாகவும் அதனால்,மூடுவதாக அப்போது இதற்கு காரணம் கூறப்பட்டது.
ஆனால், நல்லாட்சி அரசு காலத்தில் அதுவும், முன்னாள் அமைச்சர் றிஷாத் பதியுதீனின் சேவையால் திறக்கப் பட்டவை என்பதற்காக, அரசியல் பழிவாங்கலாகவே மக்களின் வயிற்றில் அடித்த இச் செயல்பாடு, முன்னெடுக்கப்பட்டதாக, அப்போது மக்கள் பேசிக் கொள்ளவும் தவறவில்லை.
இதனால், மூடப்பட்ட கிளைகளில் பணியாற்றிய பலரும் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
மக்களுக்கான சேவைகளை தொடர்ந்து வரும் எத்தனையோ அரச நிறுவனங்கள், நஷ்டத்தில் இயங்கிய போதும், அவை தொடர்ந்தும் மக்கள் சேவையாற்றி வருகின்றன. ( உதாரணமாக,பெட்ரோலியத் துறையை குறிப்பிடலாம் )
அரசு நிறுவனங்கள் யாவும் இலாப நோக்கத்துடன் மட்டுமே இயக்க படுவதில்லை. அவ்வாறு நோக்கும் போது,மேற்படி சதோச கிளைகள் மூடப்பட்டதை, ‘பழிவாங்கல் ‘ என்று இல்லாமல் வேறு என்ன தான் சொல்வது?
மூடப்பட்ட இந்த சதோச கிளைகளை திறப்பதில் அரசுக்கு ஆதரவு வழங்கி வரும் தமிழ், முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்களே மௌனம் காப்பதன் மர்மம் என்ன என்றும் மக்கள் வினவுகின்றனர்.
தமிழ்,முஸ்லிம் பிரதேசங்களுக்கு ஒரு நீதி, பெரும்பான்மை மக்கள் வாழும் பிரதேசங்களுக்கு ஒரு நீதியா? என அவர்கள் கேட்டுக்கின்றனர்.
கொரோனா பெரும்தொற்று பேரிடர் ஒ காலத்தின் தேவை கருதியாவது, கிழக்கில் தமிழ், முஸ்லிம் பிரதேசங்களில் மூடப்பட்ட,லங்கா சதோச கிளைகளை மீளவும் திறக்க ஆவண செய்யப்படுமா?
எதற்கெல்லாமோ கை உயர்த்தும் புதிய அரசியல் ஞானம் கொண்டவர்களின் கவனம் இது விடயத்தில் இனியாவது திரும்புமா?