வௌிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்லுகின்ற நபர்கள், எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு வழங்குமாறு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்.
இதனை, அலரி மாளிகையில் இடம்பெற்ற அந்நிய செலாவணி அபிவிருத்தி செயலணி கூட்டத்தின் போது நிதி அமைச்சர் இந்த பணிப்புரையை விடுத்தார்.
மேலும், வௌிநாட்டு வேலைவாய்ப்பில் இலங்கையர்களுக்கு கேள்வி நிலவுவதாகவும் ஆனால் வௌிநாடு செல்ல எதிர்பார்க்கும் பணியாளர்களுக்கு விமானத்தில் ஆசனம் ஒதுக்கிக் கொள்ள முடியாத நிலை காணப்படுவதாகவும் இந்த கூட்டத்தின் போது தெரியவந்தது.
இதனையடுத்து உள்நாட்டு விமான சேவை மற்றும் வௌிநாட்டு விமான சேவைகளுடன் பேசி இந்த பிரச்சினையை தீர்த்து வைக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு அமைச்சர் பணித்தார்.
அத்துடன், இலங்கைக்கு அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் ஏற்றுமதி துறைகளின் முன்னேற்றம் குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
அதன்படி, கடந்த வருடம் ஏற்றுமதி மூலம் கிடைத்த மாதாந்த வருமானம் 840 மில்லியன் அமெரிக்க டொலர் என்ற போதும் இவ்வருடத்தின் முதல் 8 மாதங்களில் அது 986 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளதென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2021ம் ஆண்டின் முதல் 8 மாதங்களில் ஏற்றுமதி மூலம் 7886 மில்லியன் அமெரிக்க டொலர் அந்நிய செலாவணியாக கிடைத்துள்ளதாகவும் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 22.4% சதவீத வளர்ச்சி என்றும் கூட்டத்தில் கூறப்பட்டது.
இதேவேளை, உற்பத்தி பொருளாதாரத்தின் மீது அதிக கவனம் செலுத்தி அதற்கு முன்னுரிமை கொடுப்பதாகவும் ஏற்றுமதி துறையில் தொடர்ந்து கூடுதல் கவனம் செலுத்தி பொருளாதார வளர்ச்சிக்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இங்கு உரையாற்றிய நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.