சபாநாயகர் உள்ளிட்ட தூதுக்குழுவினரை பிரான்ஸ் வருமாறு அழைப்பு.

பிரான்ஸ் – இலங்கை பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் தலைவரும் பிரான்ஸ் பாராளுமன்ற செனட் உறுப்பினருமான ஜொஎல் கெரியோ (Joel Guerriau) உள்ளிட்ட பிரான்ஸ் – இலங்கை பாராளுமன்ற நட்புறவுச்சங்க பிரதிநிதிகள் இலங்கை பாராளுமன்றத்துக்கு அண்மையில் விஜயம் செய்தனர்.

நட்புறவுச்சங்கத்தின் பிரதித் தலைவி செனட் உறுப்பினர் அனிக் ஜக்மன்ட் (Annik Jacquemet), சங்கத்தின் உறுப்பினர் அலன் ஹூபர் (Alain Houpert) மற்றும் சங்கத்தின் நிறைவேற்று செயலாளர் திருமதி. ஏன் லோரா (Anne Laure) உள்ளிட்டோர் இதன்போது கலந்துகொண்டனர்.

குறித்த விஜயத்தின் போது அவர்கள் நாட்டின் பாராளுமன்ற அமர்வுகளை பார்வையிட்டதுடன் இரு நாட்டு பாராளுமன்ற நட்புறவுச் சங்கங்களுக்கிடையில் விசேட சந்திப்பொன்றிலும் கலந்து கொண்டனர்.

இச்சந்திப்பில் உரையாற்றிய, பிரான்ஸ் – இலங்கை பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் தலைவரும் பிரான்ஸ் பாராளுமன்ற செனட் உறுப்பினருமான ஜொஎல் கெரியோ (Joel Guerriau), பிரான்ஸ் மற்றும் இலங்கைக்கு இடையில் பல்வேறு துறைகளில் காணப்படும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த எதிர்பார்ப்பதாகவும், இலங்கையின் அபிவிருத்திக்கு தொடர்ந்தும் பங்களிப்பு செய்வதாகவும் தெரிவித்தார். அத்துடன் இலங்கை சபாநாயகர் உள்ளிட்ட தூதுக்குழுவினரை பிரான்ஸ் வருமாறும் அவர் அழைப்பு விடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *