ஓட்டமாவடி ஆற்றில் தோணி மற்றும் படகு மூலம் மீன்பிடித் தொழிலாக கொண்ட மீனவர்கள் அண்மைக்காலமாக தங்களது தொழிலை மேற்கொள்வதில் பல்வேறு சிரமங்களை தொடர்ச்சியான நாளாந்தம் அனுபவித்து வருவதாக மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்
ஓட்டமாவடி மீனவர்கள் தங்களது ஜீவனோபாயத்திற்காக தோணி மற்றும் படகு மூலம் மீன்பிடிப்பதை தொழிலாக கொண்டுள்ளனர். இவர்கள் மூலம் நேரடியாகவும் மறைமுகமகவும் பல்வேறு குடும்பங்கள் தங்களது ஜீவனோயத்தினை கடத்தி வருகின்றனர்.
இது குறித்து மேலும் தெரியவருவது,
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி ஆற்றில் மீன் பிடிக்கும் மீனவர்களுக்கு தொடர்ச்சியாக மீன் தொழிலை மேற்கொள்ளாத வகையில் பல்வேறு இடையூறுகளை பொதுமக்கள் வழங்குவதாக மீனவர்கள் கவலை தெரிவித்தார்.
ஓட்டமாவடி மீனவர்கள் மீராவோடை தொடக்கம் ஓட்டமாவடி பாலத்தை தாண்டி தியாவட்டவான் பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்லும் போது அந்த பகுதியிலுள்ள ஆற்றின் ஓரங்களில் உள்ள பொதுமக்களும் வேறு பிரதேசத்தில் உள்ள மக்களும் கழிவுகளை வீசி வருகின்றனர் இதன் காரணமாக மீனவர்களின் மீன்பிடி தொழிலானது பாரிய இன்னல்களை சந்திக்க நேரிடுகின்றது.
அந்தவகையில் மீராவோடை தொடக்கம் ஓட்டமாவடி பாலத்தை தாண்டி தியாவட்டவான் பகுதி வரைக்கும் ஆற்றங்கரை ஓரத்தில் தங்களுடைய வீட்டு கழிவுகள், குழந்தைகளின் மலசல கழிவுகள் என்பவற்றை கொட்டுகின்றனர். அத்தோடு கோழி இறைச்சி, ஆட்டு இறைச்சி, மாட்டு இறைச்சி வியாபாரிகள சிலர் தங்களுடைய இறைச்சி கழிவுகளையும் மூடைகளில் வீசி விட்டு செல்கின்றனர்.
இதன்காரணமாக அனைத்து கழிவுகளும் ஆற்றில் சேரும் போது இவை மீனவர்களின் வலைகளில் சிக்கிக் கொள்வதுடன், இதனை மீன்கள் உணவாக உண்ணும் பட்சத்தில் மீன்களில் இனம் அழிவடைந்து காணப்படுகின்றது. குறித்த பகுதியில் மீன்களைவிட பொதுமக்களினால் வீசப்படும் கழிவுகளே அதிகமாக காணப்படுகின்றது.
பொதுமக்கள் தங்களது வீட்டுக்கழிவுகளையும் இறைச்சிக்கடை வியாபாரிகள் சிலர் பேன்னில் கட்டி ஆற்றில் கொட்டுவதுடன், சிலர் தங்களது வீட்டு கழிவு நீரை குழாய் மூலம் ஆற்றில் விடுகின்றனர். இதனால் கழிவு நீரும் ஆற்றில் சேர்கின்றது இதனால் மீன் இனப்பெருக்கம் குறைவாக காணப்படுவதாக மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அரசாங்கத்தின் உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் சௌபாக்கியா திட்டத்தில் அமையப்பெற்ற கொடுவா மீன் உற்பத்திகள் பொதுமக்களின் கழிவுகள் மூலம் முற்றாக பாதிப்படைந்து காணப்படுவதாக மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
பெரும்பாலும் ஆற்றில் குப்பைகள் கொட்டப்படுவதாகவும், இதனால் ஆறு முற்றாக பாதிக்கப்படுவதாகவும், வலை வீசும் போது வலையில் மீன்கள் வருவதில்லை, பொதுமக்களினால் வீசப்படும் கழிவுகள் தான் அதிகம் வருகின்றது என்று மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்
ஓட்டமாவடி ஆற்றில் அதிகம் குப்பைகள் கொட்டுகின்றனர்.அத்தோடு பொது மக்கள் தங்களது வீட்டு குப்பைகளை சேகரித்து பாலத்தின் ஊடாகவும் கொட்டுகின்றனர். இதனால் காலப்போக்கில் ஆற்றில் மீன் பிடிக்க முடியாத நிலை போய் எங்களது வலைகளில் குப்பைகளை சேகரிப்பதுடன் ஆறும் துர் நாற்றம் வீசும் நிலைமை உருவாகும். இது தொடர்பில் ஓட்டமாவடி பிரதேச சபையிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
நாங்கள் ஒவ்வொரு தடவையும் குறித்த விடயம் தொடர்பில் பல்வேறுபட்ட அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் போன்றோருக்கு தெளிவுபடுத்தியும் யாரும் கரிசனை கொள்ளவில்லை. மீன்பிடித் துறையினை அபிவிருத்தி செய்யும் நோக்கில் அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் அரச அதிகாரிகள் கவனம் செலுத்துவது குறைவாகவே காணப்படுகின்றது.
எனவே ஓட்டமாவடி ஆற்றில் அதிகம் கழிவுகளை வீசுவதாலும், கழிவு நீரினையும் திறந்து விடுவதாலும் ஆற்றின் தன்மை அழிவடைந்து, மீனினம் முற்றாக இல்லாமல் போகும் நிலைமை உருவாகின்றது. இந்த நிலைமை தொடர்ந்தால் ஓட்டமாவடி ஆறு குப்பைகள் மற்றும் இறைச்சி கழிவுகளால் நிறைந்த கழிவு கூடமாக மாற்றம் பெரும். இதனால் மீன் தொழிலாளிகள் தங்களது வாழ்வாதாரத்தினை இழந்து நிர்க்கதியாகும் நிலைமை உருவாகும்.
குறித்த விடயம் தொடர்பில் மீன்பிடித் திணைக்களத்தின் பரிசோதகரிடம் முறைபாடு செய்துள்ளோம். இது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். ஆனால் இன்னும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. இதற்கு உரிய தீர்வினை பெற்றுத் தரவேண்டும்.
எனவே ஆற்றில் போடப்படும் வீட்டு கழிவுகள், குழந்தைகளின் மலசல கழிவுகள், கோழி இறைச்சி, ஆட்டு இறைச்சி, மாட்டு இறைச்சி வியாபாரிகள் தங்களுடைய கழிவுகளை போடுவதனால் வலைகள் சேதமடைந்த நிலையிலும், மீனவர்களின் தொழில்களை தொடர்ந்தும் பாதிப்படைந்து காணப்படும் நிலையில், கழிவுகளை ஆற்றில் போடாது தடுப்பதுடன் மீனவர்களின் தொழிலை திறம்பட மேற்கொள்ளும் வகையில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருமாறு மீனவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.