
சிறுவர்களுக்கே பைஸர் தடுப்பூசி மருத்துவர்கள் மீண்டும் கோரிக்கை!
உலகளாவிய ரீதியில் சிறுவர்களுக்கு ஏற்றப்பட வேண்டிய ஒரே சிறந்த தடுப்பூசி பைஸர் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எனவே அதைச் சிறுவர்களுக்கு முன்னுரிமை அளித்துச் செலுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மருத்துவர் பிரசாத் கொலம்பகே தெரிவித்துள்ளதாவது-
தற்போது சிறுவர்கள் தொற்றுக்குள்ளாகும் நிலை அதிகரித்துள்ளது. இறப்பு வீதமும் அதிகரித்துள்ளது. எனவே அவர்களுக்குத் தடுப்பூசி செலுத்த வேண்டியது அவசியம். அவர்களுக்குப் பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசி, பல பிரதேசங்களிலும் பல்வேறு வயது மட்டங்களின் கீழ், அரசியல்வாதிகளின் தேவைகளுக்கு அமைய செலுத்தப்படுகின்றது.
விசேட மருத்துவர் குழுவின் கோரிக்கைக்கு அப்பால் இவ்வாறு தடுப்பூசி செலுத்தப்படுகின்றது. இதனால் ஏற்படும் முரண்பாடுகளால் விசேட மருத்துவர் குழுவிலிருந்து மருத்துவர்களும் விலகுகின்றனர். இந்த முரண்பாடு எதிர்காலத்தில் ஏற்பட இடமளிக்க வேண்டாம்.
பைஸர் தடுப்பூசியை சிறுவர்களுக்கு ஏற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.
எதிர்வரும் வாரங்களில் இலங்கைக்குக் கிடைக்கவுள்ள 4 மில்லியன் பைஸர் தடுப்பூசிகளை சிறுவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆசிரியர்களது கோரிக்கை போலவே சிறுவர்களுக்கா கவும் குரல்கொடுத்து, தடுப்பூசியைச் செலுத்தும் நடவடிக்கையை முன்னெடுத்து பாடசாலைகளைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏனைய வயதுப்பிரிவினருக்கு ஏனைய தடுப்பூசிகள் உள்ளன. கிடைக்கவுள்ள பைஸர் தடுப்பூசியை சிறுவர்களுக்கு ஒதுக்கவும். இல்லையேல் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தொடர்பில் அண்மையில் சந்திக்கும் துரதிஷ்ட சம்பவங்கள் போல், சிறுவர்கள் தொடர்பிலும் சந்திக்க நேரிடும்.- என்றார்.