மீண்டும் பிள்ளையார் சிலையை வைக்க நடவடிக்கை!

மன்னார் மடு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் பிள்ளையார் சிலை ஒரே இரவில் சிதைக்கப்பட்டு அப்பகுதியில் அந்தோனியார் சிலை வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி நிலையில் இன்று திங்கட்கிழமை(13) காலை குறித்த பகுதிக்குச் சென்ற மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மேல் குறித்த சம்பவத்தை நேரடியாக அவதானித்ததுடன், குறித்த பகுதியில் வைக்கப்பட்ட அந்தோனியார் சிலையை அகற்றி மடு பொலிஸார் மடு பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,

மடு – பரப்புக்கடந்தான் வீதியில் மடு தேவாலயத்தில் இருந்து நான்கு கிலோ மீற்றர் தூரத்தில் இருந்த பிள்ளையார் சிலை ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை மாயமாகியுள்ளது டன், அதே தினத்தில் குறித்த இடத்தில் அந்தோனியார் சிலை வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 40 வருடங்களுக்கு மேலாக அப்பகுதியில் மரத்தின் கீழ் குறித்த பிள்ளையார் சிலை வைக்கப்பட்டிருந்தது.

அப்பகுதி காட்டுப்பகுதி என்பதால் மதங்கள் கடந்து அப்பகுதியால் செல்பவர்கள் அப்பகுதியில் இருந்த பிள்ளையார் சிலையை வணங்கி விட்டு செல்வது வழக்கம் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் அப்பகுதியில் சிறிய கோயில் ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்த நிலையில் முதல் கட்டமாக மூலஸ்தானம் அமைக்கப்பட்டு அதற்கு தற்காலிகமாக பிள்ளையார் சிலை வைக்கப்பட்டிருந்த, நிலையில் குறித்த பகுதியில் உள்ள பிள்ளையார் சிலையை சில விசமிகள் அகற்றிவிட்டு அந்தோனியார் சிலை வைத்துள்ளனர்.

இந்த நிலையில் இந்து மக்கள் மற்றும் இந்துக் குருக்கள் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டி மேல்,மடு பொலிஸார் மற்றும் மடு பிரதேச செயலாளர் ஆகியோர் இன்று திங்கட்கிழமை (13) காலை குறித்த பகுதிக்குச் சென்று பார்வையிட்டதோடு, புதிதாக வைக்கப்பட்ட அந்தோனியார் சிலை அகற்றப்பட்டு மடு பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

மேலும் அவ்விடத்தில் இருந்த பிள்ளையார் சிலையை மீண்டும் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, குறித்த சம்பவம் தொடர்பாக மடு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *