யாழ்.நகரில் பதுக்கிவைத்த டீசல் நள்ளிரவில் கள்ளமாக விற்பனை: மக்கள் ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாணம், ஏப் 02

யாழ்.நகரில் உள்ள எரிபொருள் விற்பனை நிலையம் ஒன்றின் முன்னால் டீசலுக்காக வாகனங்கள் காத்திருக்கையில், அரச மற்றும் தனியார் வாகனங்களை பயன்படுத்தி பிரபல ஹோட்டல்களுக்கு டீசல் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

இதனால் நேற்று நள்ளிரவு யாழ்.நகரில் குழப்பமான நிலை ஏற்பட்டதுடன், கொள்கலன்களுடன் டீசல் வாங்கவந்த கார் ஒன்றை வாகன சாரதிகள் மடக்கி பிடித்த நிலையில் சாரதி தப்பி ஓடியிருக்கின்றார்.

ஐக்கிய இலங்கை சந்தைப்படுத்தல் கூட்டுறவுச் சங்கத்திற்கு சொந்தமான இந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசலுக்காக பெருமளவு வாகனங்கள் காத்திருந்த நிலையில் சிறைச்சாலை வாகனம், தனியார் வாகனங்களில் வந்த சிலர் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் சகல விளக்குகளையும் அணைத்துவிட்டு கொள்கலன்களில் டீசல் பெற்றுள்ளனர்.

அவ்வாறு பெறப்பட்ட டீசல் யாழ்.மாவட்டத்திலுள்ள பிமுகர்களுக்கும், பிரபல ஹோட்டல்களுக்கும் அனுப்பபட்டுள்ளது. மேலும் இவை அனைத்தும் இராணுவ பாதுகாப்புடன் நடைபெற்ற நிலையில் இதனை அவதானித்த வாகன சாரதிகள் எரிபொருள் நிரப்பு நிலையத்தை முற்றுகையிட்ட நிலையில்,
அங்கிருந்த வாகனங்கள் தப்பி ஓடிய நிலையில் கார் ஒன்றை மடக்கி பிடித்தபோதும் அதன் சாரதி தப்பி ஓடியுள்ளார்.

மேலும் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் முகாமையாளரும் அங்கில்லாத நிலையில் அவரும் தப்பி ஓடியதாக கூறப்படுகின்றது.  இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்திருந்த பொலிஸார் எரிபொருள் நிரப்பு நிலையத்தினரை கண்டித்திருக்கின்றனர்.

இந்நிலையில் பொதுமக்களுக்கு வழங்கப்படாமல் பதுக்கப்பட்டுள்ள எரிபொருளை பொதுமக்களுக்கு
பகிர்ந்தளிக்கவேண்டும் என வாகன சாரதிகள் கேட்ட நிலையில் பிணக்கு நள்ளிரவு தாண்டியும் நீடித்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது. .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *