விவசாயிகள் 10% கழிவுகளின்றி தமது உற்பத்திகளை தாமே சந்தைகளுக்கு வழங்கலாம் என்ற நடைமுறை தொடர்பாக திருநெல்வேலி சந்தையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன .
விவசாயிகள் தமது உற்பத்தி பொருட்களை சந்தைகளில் வழங்கும்போது 10% கழிவுகள் வழங்கப்படுவதால் தாம் நஸ்டங்களை எதிர்கொள்வதாக விவசாயிகள் முன்வைத்த கோரிக்கைக்கு இணங்க, இது தொடர்பில் ஆராய யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் , நேற்றைய தினம் திருநெல்வேலி பொதுச்சந்தைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இதன்போது, நல்லூர் பிரதேச சபை தவிசாளர், வருமான வரி பரிசோதகர், கமநல சேவைகள் அதிகாரிகள் ஆகியோரும் சென்றிருந்தனர்.
திருநெல்வேலி சந்தையில் இனிவரும் நாட்களில் விவசாயிகள் இடைத்தரகர்கள் இன்றியும், 10% கழிவுகளின்றியும் நேரடியாக தாமே உற்பத்தி பொருட்களை சந்தை வியாபாரிகளுக்கு வழங்க இணக்கம் காணப்பட்டது.
மேலும் இதனை நடைமுறைப்படுத்துவதில் நல்லூர் பிரதேச சபை முழுமையான ஒத்துழைப்பு வழங்குமென நல்லூர் பிரதேச சபை தவிசாளர் உறுதியளித்திருந்தார்.
தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில் விவசாயிகளுக்கு ஏற்படும் நஸ்டத்தை தடுக்கும் வகையில், திருநெல்வேலி பொதுச்சந்தையை போன்று ஏனைய பொதுச் சந்தைகளும் விவசாயிகளிடமிருந்து 10% கழிவுகளின்றி உற்பத்தி பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டுமென அங்கஜன் இராமநாதன் இதன்போது கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


