
பொலிசாரின் அடக்கு முறைக்கு எதிராக யாழில் நாளை மூன்றாம் திகதி இடம்பெற இருந்த மாபெரும் கண்டன போராட்டம் சிலநாட்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்க்கப்பட்டோரின் செயலாளர் லீலாதேவி ஆனந்தன் நடராஜன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
கடந்த 20 ஆம் திகதி யாழுக்கு வருகை தந்திருந்த நாட்டின் பிரதமருக்கு எதிர்ப்பினை காட்டும் வகையில் வடக்கு,கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போராட்டத்திலே மக்கள் பலர் பொலிஸாரின் தாக்குதல்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து , இதனை சர்வதேசத்துக்கு எடுத்து சொல்லும் வகையிலும் எதிர்ப்பு பேரணியினை நாளை ஏற்பாடு செய்திருந்தனர்.
அதன்படி, நாளை தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ் மத்திய பஸ் நிலையத்திலிருந்து முற்றவெளியில் நிறைவு செய்து சர்வதேசத்துக்கு கண்டன குரல்களை வெளிப்படுத்துவதாக ஏற்பாடு செய்திருந்தது.
எனினும் இந்த ஏற்பாடானது நாட்டு தமிழ் மக்களை இரும்புக்கரம் கொண்டு , குரல் வளை நசுக்கப்பட்டு சுதந்திரம் பறிக்கப்பட்ட நிலையில் மேலும் இந்த போராட்டத்தினால் மக்களை நசுக்குவதற்கு வாய்ப்பாக அமைய கூடாது.
அதன் அடிப்படையிலும் தமிழ் உறவுகளுக்கு ஏற்படும் சிக்கல்களை தவிர்க்கும் முகமாகவும் ஓரிரு தினங்கள் இந்த போராட்டத்தினை ஒத்தி வைப்பதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் நிலைமைகளை சீர்தூக்கி பார்த்து மீண்டும் இந்த போராட்டம் நடைபெறும்.
இதற்கு பல அமைப்புக்களுடனும் அரசியல் பிரமுகர்களுடனும் ஆலோசித்து வருவதாக குறிப்பிட்டிருந்தார்.
எனவே, இதனை ஆராய்ந்து மீண்டும் போராட்டத்தினை மேற்கொள்ளுவதற்கு ஏற்ற திகதி அறிவிக்கப்படும் என மேலும் தெரிவித்தார்.
மேலும், 2000 க்கும் மேற்பட்ட தமிழ் உறவுகள் போராட்டத்தில் கலந்து கொள்ளவிருந்ததாகவும், இதில் கலந்துகொள்ளவிருந்த சமூக அமைப்புகள்,பொதுமக்கள் ஆகியோரின் ஒத்துழைப்புக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.