இலங்கையின் தற்போதைய நிலவரம் குறித்து உன்னிப்பாக கவனித்து வருகின்றோம்! ஐ.நா விடுத்த வேண்டுகோள்

கொழும்பு மிரிஹானவில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து ஐநா கவலை வெளியிட்டுள்ளது.

இலங்கையின் தற்போதைய நிலவரம் குறித்து உன்னிப்பாக கவனித்துவருகின்றோம் என ஐக்கிய நாடுகள் வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் வன்முறைகள் வெடித்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் குறித்து கரிசனை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர் அனைத்து குழுக்களும் பொறுமையை கடைப்பிடிக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை மிரிஹானவில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவேளை கைதுசெய்யப்பட்டவர்களிற்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதை அரசாங்கம் தவிர்க்கவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை தனது டுவிட்டர் பதிவில் வேண்டுகோள் விடுத்துள்ளது

சட்டத்தரணிகளால் வெளியிடப்பட்டிருக்கும் கருத்துக்களின்படி மார்ச் 31 ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் பின்னர் 50 இற்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் கைதுசெய்யப்பட்டிருப்பதுடன் அவர்கள்மீது பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்படக்கூடிய அச்சுறுத்தல் காணப்படுகின்றது.

மோசமடைந்துவரும் பொருளாதார நெருக்கடிகளுக்குத் தீர்வை வழங்குமாறுகோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராகப் பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பயன்படுத்துவதை ஆட்சியாளர்கள் தவிர்க்கவேண்டும்.என சர்வதேச மன்னிப்புச்சபைமன்னிப்புச்சபை தனது டுவிட்டர் பதிவில் வேண்டுகோள் விடுத்துள்ளது.

‘பயங்கரவாத’ செயல்களுடன் தொடர்புடையவர்களெனச் சந்தேகிக்கப்படுவோரைத் தடுத்துவைப்பதற்கும் அவர்களுக்கான அடிப்படைப் பாதுகாப்பை மறுப்பதற்கும் பயங்கரவாதத்தடைச்சட்டம் இடமளிக்கின்றது.

அத்தோடு அச்சட்டத்தின்படி வாக்குமூலமும் ஓர் ஆதாரமாக ஏற்கப்படுகின்றது. எனவே அச்சட்டத்தின் பிரயோகம் உடனடியாக இடைநிறுத்தப்படவேண்டும்.என சர்வதேச மன்னிப்புச்சபை தனது டுவிட்டர் பதிவில் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அடிப்படைவாதிகளாலேயே மிரிஹான ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ள நிலையில் அதனை மேற்கோள்காட்டி சர்வதேச மன்னிப்புச்சபையின் ஆய்வாளரும் மனித உரிமைகள் செயற்பட்டாளருமான த்யாகி ருவன்பத்திரண அவரது டுவிட்டர் பக்கத்தல் பதிவொன்றைச் செய்திருக்கின்றார்.

நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட எவரேனும் அத்தகைய அடிப்படைவாதக்குழுவைக் கண்டீர்களா? என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், ‘தமது அத்தியாவசியத்தேவைகளுக்காக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் ‘அடிப்படைவாதிகள்’ என்று அழைக்கப்படுகின்றனர்.

சிலவேளைகளில் இந்த நிலைப்பாடு உங்களுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டிருக்காவிட்டால் பல தசாப்தங்களாக சிறுபான்மையின மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டுவந்த இந்த கருத்தியலை நீங்கள் நம்பியிருப்பீர்கள்’ என்று என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதேபோன்று மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் ஜனநாயகம் நடைமுறையில் இருக்கும் நாடொன்றில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கான உரிமை என்பது இன்றியமையாததாகும் என்று தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்

 சமூக ஊடகங்களில்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *