
அரசாங்கம் உடன் பதவி விலகவேண்டும் என்று வலியுறுத்தி நேற்றுமுன்தினம் இரவு ஆரம்பித்த ஆர்ப்பாட்டங்கள் நேற்றும் பூதாகரமாக வெடித்துள்ளன. கொழும்பு விஜேராம பகுதியிலும் இதர பகுதிகளிலும் இந்தப் போராட்டங்கள் மிகத்தீவிரம் பெற்றுள்ளன.
கொழும்பு
ஜனாதிபதி கோத்தாபயவின் இல்லத்தை முற்றுகையிட்டு நேற்றுமுன்தினம் நள்ளிரவு மக்கள் பெரும் போராட்டத்திலும் வன்முறையிலும் ஈடுபட்ட நிலையில், நேற்றும் நாட்டின் பல பகுதிகளிலும் மக்கள் போராட்டங்கள் தீவிரத்தோடு வெடிக்கத் தொடங்கியுள்ளன.
ஆரம்பத்தில் பல்கலைக் கழக மாணவர்கள் தீப்பந்தங்களுடன் போராட்டத்தில் களமிறங்கினர். இதையடுத்து பலநூறு பொதுமக்களும் தன்னெழுச்சியாக போராட்டத்தில் கலந்துகொண்டனர். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்காக பொலிஸாரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டிருந்தனர்.
எனினும் எதையும் பொருட்படுத்தாமல் போராட்டங்கள் பல்வேறு இடங்களிலும் தன்னெழுச்சியுடன் தொடர்ந்தன.
‘கோ ஹோம் கோத்தா’ (வீட்டுக்குச் செல்லுங்கள் கோத்தா) என்ற வார்த்தையை ஆர்ப்பாட்டக்காரர்கள் பாடலாகப் பாடிக்கொண்டிருந்தனர். பல்கலைக் கழக மாணவர்கள் பலநூறு பேர் பெருந்திரளாகத் திரண்டிருந்தமையால் அசம்பாவிதம் இடம்பெற்றுவிடக்கூடாது என்பதிலும் பாதுகாப்புத் தரப்பு அதீத எச்சரிக்கையைக் காட்டியது.
நுவரெலியா
வசந்த காலத்தை முன்னிட்டு, நுவரெலியாவில் வசந்தகால நிகழ்வுகள் கோலாகமாகக் கொண்டாடப்படுவது வழமையானது. இந்த வருடத்துக்கான வசந்தகால நிகழ்வுகளுக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, நாடு இப்போதிருக்கும் நிலையில் இந்த நிகழ்வுகள் தேவைதானா? என்று கேள்வியெழுப்பி சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிறிது நேரத்திலேயே ஆர்ப்பாட்டம் தீவிரம்பெறத் தொடங்கியது. ஜனாதிபதி பதவி விலகவேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து நிகழ்வுகள் அனைத்தும் இடைநடுவில் கைவிடப்பட்டன. பொலிஸார் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
மொரட்டுவ
இதேவேளை, மொரட்டுவ மாநகர சபையின் பிரதான நுழைவாயிலுக்கு அருகிலும் நேற்றுப் போராட்டம் இடம்பெற்றது. மரத் தொழிலில் ஈடுபடுபவர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வில்லோரவத்தை மரக் கூட்டுத்தாபனத்தில் இருந்து மொரட்டுவை மாநகர சபைக்கு பேரணியாக சென்று அங்கு அவர்கள் தமது போராட்டத்தை முன்னெடுத்தனர். பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. மொரட்டுவ மாநகர சபையில் உள்ள ஜே.வி.பி. உறுப்பினர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
இதைவிட பருத்தித்துறை தொடக்கம் தெய்வேந்திர முனைவரை ஐக்கிய பெண்கள் சக்தியினால் அரசாங்கத்துக்கு எதிராக பேரணியும் நடத்தப்பட்டு வருகின்றது. அத்துடன், கொழும்பின் சில பகுதிகளிலும் நேற்றுப் போராட்டம் இடம்பெற்றது. அடுத்தடுத்த நாள்களில் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களை தீவிரப்படுத்த ஜே.வி.பி. மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பன தீர்மானித்துள்ளன என்றும் தெரியவருகின்றது.