
நாட்டிற்குள் அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில், நாட்டில் நடைமுறையில் உள்ள அனைத்து சட்டத் திட்டங்களையும் மீறி பொது பாதுகாப்புச் சட்டம் முதன்மை பெறும் என சிரேஷ்ட சட்டத்தரணி கலாநிதி பிரதீபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
எனினும் 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்தின் மனித உரிமை தொடர்பான மூன்றாவது ஷரத்தை மீறி செயற்படும் இயலுமை பொது பாதுகாப்பு சட்டத்திற்கு கிடையாது.
இதன் காரணமாக அவசரகால நிலை நாட்டில் நடைமுறையில் இருந்தாலும் மக்களின் பேச்சுரிமை, ஒன்றுக்கூடும் உரிமை, எதிர்ப்பை வெளியிடும் உரிமை என்பன பாதுகாக்கப்படும்.
எனினும் அவசரகால நிலை நடைமுறையில் இருக்கும் போது, பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் எவ்வித குற்றச்சாட்டும் இன்றி நபர்களை கைது செய்ய அதிகாரம் கிடைக்கும்.
அவ்வாறு குற்றச்சாட்டு அல்லது பிடியாணையின்றி கைது செய்யப்படும் நபர்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதை தடுக்கும் வகையிலான உரிமையும் அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.