
அவசரகாலச் சட்டத்தை பிரகடனப்படுத்தப்பட்டமை, பொதுமக்களின் எதிர்ப்புக்கள் உட்பட நாட்டின் தற்போதைய நிலைமைக்கு தீர்வாகாது என்று இலங்கை சட்டத்தரணிகள் சம்மேளனம் தெரிவித்துள்ளது
எனவே அவசரகால பிரகடனத்தை திரும்பப் பெறுமாறும், மக்களின் அடிப்படை உரிமைகளான பேச்சு சுதந்திரம் மற்றும் பிரசுர சுதந்திரம், அமைதியான முறையில் ஒன்றுகூடும் சுதந்திரம் போன்றவற்றை உறுதி செய்யுமாறும் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.
அவசரகால நிலையை, அமைதியான போராட்டங்கள் மற்றும் கருத்து வேறுபாடுகளை ஒடுக்கவோ அல்லது தன்னிச்சையான கைதுகள் மற்றும் காவலில் வைக்கவோ பயன்படுத்தக்கூடாது.
அவசரகால நிலை பிரகடனத்தின் விளைவாக, அரசியலமைப்பின் விதிகளைத் தவிர, எந்தவொரு சட்டத்தின் விதிமுறைகளையும் மீற, திருத்த அல்லது இடைநிறுத்தக்கூடிய அவசரகாலச் சட்டங்களை உருவாக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது.
கடந்த பல மாதங்களாக நாடு ஒரு பாரதூரமான பொருளாதார நெருக்கடியை நோக்கிச் சென்று கொண்டிருப்பதுடன், உள்ளூர் மற்றும் சர்வதேசத் துறையில் உள்ள வல்லுநர்கள் மற்றும் நிபுணர்களால் வழங்கப்பட்ட முன் எச்சரிக்கைகள் கவனிக்கப்படவில்லை.
துரதிஸ்டவசமாக, அதிகாரத்தில் உள்ளவர்கள் மிக சமீப காலம் வரை நிலைமையின் தீவிரத்தையும், மக்கள் மற்றும் சமூகத்தின் வாழ்வில் நெருக்கடி ஏற்படுத்தும் பாரதூரமான தாக்கத்தையும் புரிந்து கொள்ளத் தவறிவிட்டனர்.
இது, இந்த நாட்டு மக்களை விரக்தியில் தள்ளியுள்ளது. மக்களின் அபிலாஸைகளைப் புரிந்துகொள்வதிலும், நாட்டு மக்களின் துயரங்களைப் புரிந்துகொள்வதிலும் தோல்வி ஏற்பட்டுள்ளது.
எனவே இலங்கை அரசாங்கம் அவர்களின் துன்பங்களைப் போக்கும் வகையிலான அதன் கொள்கைகள் மற்றும் பொருளாதாரத்தின் மீட்சிக்கான திட்டங்கள் குறித்து மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
இதேவேளை போராட்டத்தின் போது ஏற்படும் வன்முறைச் செயல்கள் மற்றும் பொது அல்லது தனியார் சொத்துக்கள் அழிக்கப்படுவது கண்டிக்கப்பட வேண்டும்.
அதேபோன்று, போராட்டங்களில் ஈடுபடுபவர்கள், இத்தகைய போராட்டங்கள் அமைதியான முறையில் நடைபெறுவதை உறுதிசெய்ய மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்,
மேலும், இதுபோன்ற போராட்டங்களின் போது வன்முறை மற்றும் அழிவை ஏற்படுத்த முயலுவோர் தொடர்பில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் இலங்கை சட்டத்தரணிகள் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.