
கண்டி விளையாட்டுக் கழகம் மற்றும் CH & FC அணிகளுக்கு இடையிலான இலங்கை ரக்பி லீக் போட்டி நாளை 3ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தப் போட்டி முதலில் கொழும்பு ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
அதன்பின்னர், வெலிசர கடற்படை மைதானத்தில் போட்டி நடத்தப்படும் என தீர்மானிக்கப்பட்டது.
எனினும் திடீர் இடமாற்றம் மற்றும் பார்வையாளர்களை அனுமதிக்காத காரணத்தை உத்தியோகபூர்வமாக வெளியிடவில்லை.
எனினும், நாளைய போட்டியில் பொதுமக்கள் எதிர்ப்பை எதிர்நோக்கி இந்த முடிவு எடுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் இளைய மகன் ரோஹித ராஜபக்சவும் நாளைய போட்டியில் CH & FC அணியை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாளைய போட்டிக்கு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படாவிட்டாலும், இலங்கை ரக்பி யூடியூப் சேனல் ஊடாக போட்டி நேரடியாக ஒளிபரப்பப்படும் என கண்டி விளையாட்டுக் கழகம் பேஸ்புக்கில் மேலும் பதிவிட்டிருந்தது.