
இன்று சனிக்கிழமை மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களில் ஐவேளை ஜமாஅத் தொழுகைகள் மற்றும் தராவீஹ் தொழுகைகள் என்பன தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக புத்தளம் பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
விஷேட அவசர கால சட்டத்தையும், இன்று (02) மாலை 06.00 மணி முதல் திங்கள் (04) காலை 06.00 மணி வரை அமுலுக்கு வரும் நாடு தழுவிய ஊரடங்குச் சட்டத்தை கருத்தில் கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எனவே, நாளை முதலாவது புனித நோன்பை நோற்று, அமைதியான முறையில் அனைவரும் தமது குடும்பங்களோடு சேர்ந்து அமல்களின் பக்கம் நாட்டம் செலுத்துமாறு புத்தளம் பெரிய பள்ளிவாசல் தெரிவித்துள்ளது.
அத்துடன், நாடும், நாட்டு மக்களும் பொருளாதார ரீதியாக அனுபவிக்கும் நெருக்கடிகளில் இருந்து விடுபடுவதற்கும் இறைவனிடம் அதிகம் பிரார்த்தனை செய்யுமாறும் புத்தளம் பெரியபள்ளிவாசல் மேலும் கேட்டுள்ளது.
நாட்டின் பல பாகங்களில் ரமழான் மாத தலைப்பிறை இன்று (02) தென்பட்டுள்ளதால் நாளை (03) அதிகாலை புனித ரமழான் நோன்பு ஆரம்பமாகவுள்ளதாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பிறைக்குழு அறிவித்துள்ளது.
இதன்படி, இன்று மாலை ஐவேளை தொழுகைகளுக்கு மேலதிகமாக புனித நோன்பு நிறைவடையும் வரை சகல மஸ்ஜித்களிலும் “தராவீஹ்” தொழுகை நடத்தப்படுவது வழக்கமாகும்.
இந்த நிலையிலேயே புத்தளம் பெரிய பள்ளிவாசல் மேற்படி அறிவிப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.