அரசாங்கத்தின் திடீர் ஊரடங்கு உத்தரவிற்கு இ.தொ.கா கண்டனம்!

நாடளாவிய ரீதியில் இன்று(சனிக்கிழமை) மாலை 6 மணி முதல் திங்கட்கிழமை காலை 6 மணிவரை பிறப்பிக்கப்பட்டுள்ள திடீர் ஊரடங்கு உத்தரவிற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

நாடு முழுவதும் இவ்வாறு திடீரென ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதால், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை மேலும் பாதிக்கப்பட்டுள்ளதோடு அவர்களின் இயல்பு நிலையும் ஸ்தம்பிதமடைந்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், “நாட்டில் ஏற்கெனவே ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாகவும் அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடுகள் காரணமாகவும், பொதுமக்கள் பாரிய இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

எரிபொருள், சமையல் எரிவாயு, பால்மா உட்பட அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் போன்றவற்றின் தட்டுப்பாடுகள் மற்றும் வரலாறு காணாத விலைவாசி அதிகரிப்புகள் காரணமாக, நாள்தோறும் நீண்ட வரிசைகளில் காத்திருந்து, தேவைக்குப் போதுமானளவையேனும் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இவ்வாறான தருணத்தில் திடீரெனப் பிறப்பிக்கப்படும் ஊரடங்குச் சட்டத்தால், தமது அன்றாடத் தேவைக்குத் தேவையான பொருட்களைக் கொள்வனவு செய்து சேமித்து வைக்கக்கூடிய நிலைமையில் அவர்கள் இல்லை என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும்.

இதனால், அரசாங்கத்தின் மீது அவர்களுக்கு ஏற்கெனவே ஏற்பட்டிருந்த அதிருப்தி மேலும் பன்மடங்கு அதிகரிக்குமே தவிர குறையப்போவதில்லை.

நாட்டின் தற்போதைய நிலைமையால் மக்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளின் வெளிப்பாடாகவே போராட்டங்கள் மற்றும் எதிர்ப்பலைகள் அதிகரித்து வருகின்றன.

ஜனநாயக நாட்டுக்குள் அமைதிவழிப் போராட்டங்களை நடத்துவதற்கும் எதிர்ப்புகளை வெளிப்படுத்துவதற்கும் மக்களுக்கு முழு உரிமையுள்ளது. அந்த ஜனநாயக உரிமையைத் தடுக்கும் வகையில் ஊரடங்குச் சட்டத்தைப் பிறப்பிப்பதால் மக்களின் எதிர்ப்பைத் தணித்துவிட முடியாது.

மாறாக, இப்போராட்டத்துக்கான நோக்கத்தை ஆராய்ந்து அதற்கான தீர்வுகளை வழங்குவதே ஒரு நல்ல அரசாங்கத்தின் ஆக்கபூர்வமான செயற்பாடாகும்.“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *