இலங்கை அரசாங்கத் தரப்பினர் தாங்கள் செய்தது குற்றம் என்று சர்வதேசத்திடம் ஏற்றுக் கொள்வார்களா? இல்லை சர்வசேத்தை விலை பேசி வாங்கு வார்களா? என்று தெரியவில்லை. ஆனால், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை நீங்கள் யாரும் மூடி மறைக்கவும் முடியாது கொலை செய்யவும் முடியாது என முல்லைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி மரியசுரேஷ் ஈஸ்வரி தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று 1,649 ஆவது நாளாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி தொடர் போராட்டம் நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஐ.நாவின் 48 ஆவது கூட்டத்தொடர் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில், அவர்களிடம் நாங்கள் என்ன எதிர்பார்க்கின்றோம் என்பதை ஊடகங்கள் ஊடாகத் தெரியப்படுத்துகின்றோம்.இறுதி யுத்தத்தின்போது இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட உறவுகள், வெள்ளைவானில் கடத்தப்பட்ட போது தானாக சரணடைந்தவர்களைத் தேடி 12 வருடங்கள் முடிவடைந்த இவ்வேளையில்,
ஐ.நாவுக்கு எமது அவலங்களைத் தெரியப்படுத்துகின்றோம்.
இதேவேளை, மனித உரிமைப் பேரவையில் எமக்கான ஏமாற்றங்கள் தான் தொடர்ச்சியாக வருகின்றன.
அரசாங்கத்தரப்பினர் எங்களைப் பொய் சொல்பவர்களாகவும், தங்களை நல்லவர்களாகவும் நடித்துக் கொண்டு இருக்கின்றனர்.
இன்று இதை அம்பலப்படுத்த வேண்டிய நாள்.எங்கள் மத்தியில் எல்லாச் சாட்சியங்களும் இருக்கின்றன.உலக நாட்டில் சிறுவர்களுக்கான பாதுகாப்புக்கு எத்தனையோ அமைப்புகள் இருக்கின்றன. இங்கு சரணடைந்தவர்களில் 30 இற்கும் மேற்பட்ட சிறுவர்கள் உள்ளனர். 6 மாத கைக்குழந்தையிலிருந்து 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்குக்கூட என்ன நடந்தது என்று ஐக்கிய நாடுகள் சபையால் சரியான பதில் கிடைக்கவில்லை.
மேலும் நாங்கள் இந்தப் போராட்டத்தை சர்வதேசத்தை நம்பியே ஆரம்பித்தோம்.இப்போது அதே நம்பிக்கையில் தான் தொடந்து வருகின்றோம். சர்வதேசம் மூலம் நீதி கிடக்கும் என்று நாங்கள் நம்புகின்றோம்.உண்மையான சாட்சியங்கள் நாங்கள். எங்களை அழிக்க முடியாது.காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான போராட்டங்களை நிறுத்த வேண்டும் என்கின்றனர்.
இலங்கை அரசாங்கம் சர்வதேசத்திடம் தாங்கள் செய்தது குற்றம் என்றுஏற்றுக் கொள்ளுமா? இல்லை சர்வசேத்தை விலை பேசி வாங்குமா? என்று
தெரியவில்லை.ஆனால் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை நீங்கள் யாரும் மூடி மறைக்கவும், முடியாது கொலை செய்யவும் முடியாது.
சர்வதேசமே நீ விழித்துப் பார்! எமக்கான பதிலை தா! என்றும் சர்வதேசம் என்பது ஒரு பொதுவான அமையம். 48 ஆவது ஐ.நா. மனித உரிமை அமர்வை நம்புகின்றோம். அது எமக்கு நீதியைத் தரும். இப் பெற்றோர்கள் இறக்கும் முன் நீதி வேண்டும். 12 வருடங்கள் ஆகியும் நாம் சர்வதேசத்தை தான் நம்பியிருக்கின்றோம்.எமது உயிரிருக்கும் வரை எமது உறவுகளை நாங்கள் தேடுவோம் என்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது தெரிவித்தார்.