வணக்கம்! சௌக்கியமா? கூட்டமைப்புடன் தமிழில் உரையாடிய இந்திய வெளியுறவு அமைச்சர்!

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கு இடையிலான கடந்த வார சந்திப்பின்போது தமிழ் மொழியில் சில விடயங்கள் பேசப்பட்டன.

இந்த சந்திப்பின்போது இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயும் உடனிருந்தார்.

ஜெய்சங்கர் பிம்ஸ்டெக் மாநாட்டிற்காக கொழும்புக்கு வந்திருந்தார்.

இதன்போது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் முக்கிய உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்பட்டன.

இந்தநிலையில் கடந்த திங்கட்கிழமை இந்திய இல்லத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ராஜவரோதயம் சம்பந்தனையும் குழுவினரையும் வரவேற்ற ஜெய்சங்கர் “வணக்கம்” “சௌக்கியாமா?” என்று தமிழில் விசாரித்தார்.

இதனையடுத்து தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கும் இலங்கை ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு குறித்து இரண்டு தரப்பினரும் ஆங்கிலத்தில் விடயங்களை பகிர்ந்துக்கொண்டனர்.

இதன்போது தமிழர் பிரச்சினை தீர்வு தொடர்பாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, இலங்கையின் எதிர்க்கட்சிகளுடன் உரிய சந்திப்புக்களை மேற்கொள்ளவில்லை என்று கருத்து முன்வைக்கப்பட்டு அந்த கட்சிகளுடன் சந்திப்புக்களை நடத்துமாறு வலியுறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையில் டெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், இலங்கை ஜனாதிபதியுடனான சந்திப்பை புறக்கணிக்கும் தனது கட்சியின் முடிவை விளக்க முயன்றார்,

மேலும் இந்தியாவும் பேச்சுவார்த்தைகளில் சாத்தியமான மத்தியஸ்தராக ஈடுபட்டால், டெலோ அரசாங்கத்துடன் எதிர்கால கூட்டங்களில் கலந்துகொள்வது குறித்து மறுபரிசீலனை செய்யலாம் என்று தமிழில் கூறினார்.

இதற்குப் பதிலளித்த ஜெய்சங்கர், இதுபோன்ற எந்தப் பேச்சுக்களிலும் இந்தியா நேரடியாகத் தலையிடுவதற்கான திட்டங்களும் நோக்கங்களும் இல்லை என்று தமிழ் மொழியிலேயே தெரிவித்தார்.

புதுடில்லியில் பிறந்த ஜெய்சங்கர் கிருஸ்ணசாமி சுப்பிரமணியம் மற்றும் சுலோச்சனா ஆகியோரின் மூன்று மகன்களில் ஒருவராவார், ஜெய்சங்கரின் பெற்றோர் தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மற்றும் சென்னையைச் சேர்ந்தவர்களாவர்.

இதேவேளை கடந்த வாரத்தில் இலங்கையில் தடைசெய்யப்பட்ட குழுவான உலக தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் தலைமையிலான பிரதிநிதிகள் குழு, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உயர் அதிகாரிகளை சந்தித்ததனர்.

திணைக்களத்தின் ஒரு ட்வீட்டில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. “அமெரிக்கர்களுக்கும் உலகின் பிற பகுதிகளுக்கும் இடையில் புரிந்துணர்வு பாலங்களை உருவாக்க உதவிய புலம்பெயர் சமூகங்களுடனான உறவை அமெரிக்கா மதிக்கிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சந்தப்பின்போது இலங்கையில் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் பொருளாதார சவால்கள் குறித்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உதவிச் செயலாளர் டேவிட் லூவுடன் சுரேன் சுரேந்திரன் குழுவினர் கலந்துரையாடினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *