
அரசு தன்னை பாதுகாத்துக்கொள்ள மோசமான செயற்பாடுகளில் ஈடுபட ஆரம்பித்துவிட்டது என ஈ.பி.ஆர்.எல்.எப் இன் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலவரம் தொடர்பில் “சமூகம் மீடியா”வுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அரசு தன்னைப் பாதுகாத்துக்கொள்ள மோசமான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளது. மக்கள் தமது பிரச்சினைகளை தெரிவித்து போராட்டம் நடத்தினால் அவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். ஊடகவியலாளர்கள் கூட இப்போது கைது செய்யப்படுகின்றனர். மீண்டும் கைது, கடத்தல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கு சாதகமாக அவரசரகால சட்டம் உடனடியாக அமுலுக்கு வந்துள்ளது.
சொல்லப்போனால் கேட்பார் அற்று கிடக்கும் இலங்கை என்று தான் கூற வேண்டும். மக்கள் உயிரோடு வாழ்ந்தாலே போதும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
நாட்டில் விலைவாசி அதிகரிப்பு, பொருட்கள் தட்டுப்பாடு போன்ற கடுமையான நிலைமைகள் காணப்படுகிறது. இதனை சீர் செய்வதை விடுத்து மோசமான காரியங்களில் அரசு ஈடுபட்டு வருகிறது.
தற்போது நாட்டில் உள்ள ஜனாதிபதி கோட்டா இராணுவ பின்புலம் உள்ளவர். ஆகவே நாட்டை இராணுவ ஆட்சி நோக்கி கொண்டு செல்வதற்கே முயற்சி செய்கின்றார். நாம் ஒன்று சேர்ந்து எமது போராட்டத்தை வலுச் சேர்க்க வேண்டும். ஐரோப்பிய நாடுகள் பல ஜனநாயகம்என்ற அம்சத்துக்கு குரல் கொடுத்து வருகிறது. ஆகவே நாம் எமது குரலை ஓங்கி ஒலிக்கச் செய்ய வேண்டும்.- என்றார் .