யாழ் நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளதோடு வீதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது. நாடளாவிய ரீதியில் , நேற்று சனிக்கிழமை மாலை 6 மணி முதல் நாளை திங்கட்கிழமை காலை 6 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாண நகரம் வெறிச்சோடி காணப்படுகிறது.
யாழ்ப்பாண நகருக்குள் நுழையும் பிரதான சந்திகள், வீதிகளில் பொலிஸார் ஆங்காங்கே கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை மன்னார் மாவட்டத்தின் இயல்பு நிலை ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. மன்னார் நகர் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் பொலிஸார் விசேட கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாட்டில் ஊரடங்கு நடைமுறையில் உள்ள காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளதோடு, ஏனைய சேவைகள் அனைத்தும் முற்றாக முடக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக உணவகங்கள்,வியாபார நிலையங்கள் மூடப்பட்டுள்ளதோடு, அரச ,தனியார் போக்குவரத்துச் சேவைகள் அனைத்தும் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ள நிலையில் மக்கள் முற்றாக வீடுகளில் முடங்கியுள்ளனர்.
வீதிகள் மற்றும் பொது இடங்களில் பொலிஸார் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதுடன் உரிய அனுமதியின்றி வீதிகளில் நடமாடுபவர் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்படுகின்றனர்.