
விவசாயிகளுக்கு நன்மை சேர்க்கும் 10% கழிவு முறையை நீக்க வேண்டும் என்ற தனது அறிவுறுத்தலை நடைமுறைப்படுத்தி ஏனைய பிரதேச சபைகளுக்கு முன்மாதிரியாக செயற்படும் நல்லூர் பிரதேச சபைக்கும் தவிசாளர் ப. மயூரனுக்கும் பாராட்டுக்கள் என பாராளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்தி குழு தலைவருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்ட விவசாயிகள் தற்போது சந்தைகளில் நடைமுறையில் உள்ள 10% கழிவு முறைமையால் நஷ்டத்தை எதிர்நோக்கி வருவதாக அண்மையில் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு மற்றும் மாவட்ட விவசாய குழுக் கூட்டங்களில் மாவட்ட அபிவிருத்திக் குழுத்தலைவர் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில் அங்கஜன் இராமநாதனும் நல்லூர் பிரதேசசபை தவிசாளரும் இவ்விடயம் தொடர்பாக கலந்துரையாடி இக்கழிவு முறைமையை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பொருளாதார நெருக்கடியான நிலைமையில் விவசாயிகள் எதிர்கொள்ளும் நஷ்டத்தை குறைக்கும் முகமாக திருநெல்வேலி சந்தையில் ஏற்படுத்தப்பட்ட நடைமுறை போன்று ஏனைய சந்தைகளிலும் விவசாய உற்பத்திகளுக்கான 10% கழிவு முறைமையை நீக்குவதற்கு பிரதேச சபைகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அபிவிருத்தி குழு தலைவர் தெரிவித்தார்.