
நாட்டின் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோரை தவிர ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த ஏனையோர் தாம் வகித்து வரும் அனைத்து அமைச்சு பதவிகளிலும் இருந்தும் விலகத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில், புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டு, அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல அரசாங்கத்தின் பிரதானிகள் திட்டமிட்டுள்ளதாக பேசப்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ், நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, நீர்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ச, விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச, ராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ச ஆகியோர் தமது பதவிகளை துறக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இது சம்பந்தமான இறுதி முடிவு இன்று மாலை எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, எரிபொருள், சமையல் எரிவாயு தட்டுப்பாடு, அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பு என்பன காரணமாக நாட்டில் அரச தலைவர் உட்பட அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்ப்பு உருவாகியுள்ளது.
அரச தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என போராட்டங்களில் கலந்துக்கொள்ளும் மக்கள் கோஷங்களை எழுப்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.