
கொழும்பு, ஏப் 04
அரசாங்கம் நாட்டுக்கு ஒரு கெடுவினையாகும் எனவும்,அரச பயங்கரவாதம் மக்கள் அதிகாரத்திற்கு உட்பட்டது என்பதை எந்த ஆட்சியாளரும் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
மக்களின் எதிர்பார்ப்பை தவிடுபொடியாக்கிய அரசாங்கத்தை ஒரு கணமேனும் ஆட்சியில் தக்க வைக்க இந்நாட்டு மக்கள் தயாராக இல்லை என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,இது ஜனநாயக ரீதியாக மக்கள் ஆதரவின் பெயரால் தூக்கியெறியப்படும் எனவும் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் முகமாக உறுதியாக முன் நிற்பதாகவும் என தெரிவித்தார்.
இந்த அரசாங்கம் நாட்டு மக்களை மயானத்தின் பக்கம் தள்ளிக் கொண்டிருப்பதாக தெரிவித்த எதிர்கட்சி தலைவர், இந்த காட்டுமிராண்டித்தனமான அரசை முற்றிலுமாக வீழ்த்தி தூக்கி எறிய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
மக்கள் விரோத அரசாங்கத்தின் தன்னிச்சையான சர்வாதிகார நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்க்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பல கட்சிகளைச் சார்ந்த உறுப்பினர்களின் பங்கேற்புடன் இன்று (03) சுதந்திர சதுக்கத்திற்கு முன்னால் அமைதியான முறையில் நடைபெற ஏற்ப்பாடாக இருந்த பேரணியை பொலிஸார் தடுத்து நிறுத்தினர்.
சுதந்திர சதுக்கத்திற்குச் செல்லும் சகல நுழைவு வீதிகளையும் வீதித்தடைகள் மற்றும் காவலரண்கள் தடைகளை ஏற்ப்படுத்தி பலத்த பாதுகாப்பு படைபிரிவினர் குவிக்கப்பட்டிருந்ததோடு, எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும்,பாதுகாப்புத் துறையினருக்கும் இடையே இதன் போது கடும் வாக்குவாதமும் ஏற்பட்டது.