பதவி விலக பின்னடித்த பீரிஸ், தினேஷ்

கொழும்பு, ஏப் 04

முழு அமைச்சரவையும் பதவி விலக முடிவு எடுக்கப்பட்ட போது இரு அமைச்சர்கள் கையெழுத்திட பின்னடித்து உள்ளனர் என்று சிங்கள இணையத்தளம் செய்தி வெளியிட்டு உள்ளது.

இது தொடர்பாக அந்த இணையத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சிறிலங்காவின் முழு அமைச்சரவையும் பதவி விலக முடிவு எடுக்கப்பட்ட போது வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், கல்வித்துறை அமைச்சர் தினேஷ் குணவர்த்தன உள்ளிட்டோர் முன்னதாக உடன்படவில்லை. முதலாவது நபராக கையெழுத்திட்டவர் சுற்றுச் சூழல்துறை அமைச்சர் மகிந்த அமரவீர என தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சரவையில் இருந்து விலகும் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டமை தொடர்பில் பிரதமர் மகிந்த ராஜபக்ச முன்னதாக தனது அதிருப்தியினை வெளியிட்டும் உள்ளார்.

நாட்டில் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமை குறித்து நேற்றைய சிறப்பு அமைச்சரவை அமைச்சரவை கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்ட போது- எண்ணெய், மின்சாரம் மற்றும் எரிவாயு பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்குவதற்கு அதிகபட்ச முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மகிந்த ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, அமைச்சரவையில் விலகும் கூட்டத்தில் அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் தமது பதவி விலகல் கடிதங்களை பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் கையளித்ததாக கல்வித்துறை அமைச்சராக இருந்து தற்போது விலகியுள்ள தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *