
கொழும்பு, ஏப் 04
நான் இப்படியொரு ஆர்ப்பாட்டங்களை ஒரு போதும் பார்த்ததில்லை என பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
கேள்வி- விக்கிரமசிங்க உங்கள் பொருளாதாரம் செயல் இழந்துள்ளது- உணவு மருந்து எரிபொருள் மின்சாரத்திற்கு மிகமோசமான பற்றாக்குறை காணப்படுவதால் ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் ஜனாதிபதியின் வீட்டை சுற்றிவளைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கை வீதிகளில் இவ்வாறான சீற்றம் வெளிப்படுவதை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
பதில்-நான் இவ்வாறான ஆர்ப்பாட்டங்களை முன்னர் ஒருபோதும் பார்த்ததில்லை,நான் கலவரங்களை மோதல்களை மறியல் போராட்டங்களை பார்த்திருக்கின்றேன்,இது முற்றிலும் வித்தியாசமானது,
இது பணவீக்கத்திற்கு எதிரான மக்களின் சீற்றம் வெடிப்பு .போதியளவு மின்சாரம் இன்மை, சமையல் எரிவாயு இன்மை பெட்ரோல் தட்டுப்பாடு போன்றவற்றிற்கு எதிரான மக்கள் சீற்றமிது.
முழு அமைப்பு முறையும் சிதைவடைகின்றது, மக்களால் இனிமேலும் காத்திருக்க முடியவில்லை.
நீங்கள் 13- 15 மணிநேர மின்வெட்டை எதிர்நோக்கும்போது குறிப்பாக இரவில், இது மிகவும் கடினம்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள் தொழிலாளர் வர்க்கத்தினர் இல்லை, மத்திய தர வர்க்கத்தினர் வாழும் பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன (அங்கேயே ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமாகின) இரு பிரிவினரும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
அருகில் உள்ள சந்தியில் மெழுகுதிரி போராட்டமாக ஆரம்பமானது பின்னர் அவர்கள் மிரிஹானயில் பெங்கிரிவத்தையில் உள்ள ஜனாதிபதியின் வீட்டிற்கு பேரணியாக செல்ல தீர்மானித்தனர்.
அரசியல் கட்சிகளை விட இந்த விடயத்தை பொதுமக்கள் கையில் எடுத்துள்ளதே முக்கியமானது.
அவர்கள் அரசியல் கட்சிகளை ஒரு புறம் வைத்துள்ளனர். இது அராபிய வசந்தம் போன்ற மக்கள் இயக்கம் போல காணப்படுகின்றது என்றார்.