
கிளிநொச்சி மாவட்டம் இயக்கச்சிப் பகுதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்த நபரின் தொலைபேசியில் திருமண அழைப்பு அட்டை மற்றும் தொலைபேசி இலக்கங்கள் காணப்பட்டதால் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இருவர் இரு ஆண்டுகளின் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
வட்டக்கச்சியைச் சேர்ந்த 41 வயதுடைய இரத்தினசிங்கம் கமலாகரன், வைத்தியசாலை ஊழியரான வைத்திலிங்கம் நிர்மலதாஸ் ஆகிய இருவருமே பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இயக்கச்சி நபர் உயிரிழந்த பின்னர் அவருடைய ஆவணங்களை விசாரணைக்கு உட்படுத்தியபோது வட்டக்கச்சியைச் சேர்ந்த இரத்தினசிங்கம் கமலாகரின் தொலைபேசி இலக்கமும், கைதடி வைத்தியசாலை ஊழியர் வைத்தியலிங்கம் நிர்மலதாஸின் திருமண அழைப்பிதழும் அவருடைய தொலைபேசியில் காணப்பட்டிருக்கின்றன.
இதனடிப்படையிலேயே அவர்கள் இருவரும் விடுதலைப்புலிகளை மீளுருவாக்க முயன்றார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர்.
அவர்கள் இருவரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அதேவேளை, அண்மையில் அவர்கள் சிறைச்சாலைக்குள்ளும் அவர்களின் உறவினர்கள் ஆளுநர் அலுவலகத்தின் முன்பாகவும் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதனிடையே, குறித்த இருவரும் தடுத்துவைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக அடிப்படை மனித உரிமை மீறல் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றிருந்தது.
இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது அவர்கள் இருவரையும் பிணையில் செல்ல நீதவான் லெனின்குமார் உத்தரவிட்டுள்ளார்.