பதவி விலகுவதாக கூறி புதிய நாடகத்தை அரங்கேற்றும் அரசாங்கம்: ஆசிரியர் சங்கச் செயலாளர் தெரிவிப்பு

கொழும்பு, ஏப் 4

இலங்கையில் மக்கள் வாழ முடியாதளவு வாழ்வாதார சுமையை இந்த அரசாங்கம் அதிகரித்துள்ளதாக இலங்கை ஆசிரியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று ஊடகவியலாளர்களுக்கு கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

எரிவாயு, எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் நீண்டவரிசையில் காத்திருக்கின்றனர். பல மணித்தியாலங்கள் மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படுகின்றது.

எரிபொருள் இல்லை, மின்சாரம் இல்லை என்பதால் பாடசாலைகளை மூடுமாறு கோரிக்கை விடுக்கப்படுகின்றது.

இவ்வாறு நாட்டை பாரிய பிரச்சினைக்குள் தள்ளிய இந்த அரசாங்கத்தை குறிப்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதற்காக நாட்டு மக்கள் இன்று வீதிக்கு இறங்கியுள்ளனர்.

இவ்விடயத்தில் அதிபர் ஆசிரியர் தொழிற்சங்க முன்னணி அமைதியாக இருக்க போவதில்லை. இந்த அரசாங்கம் என்ன செய்கின்றது என்றதை தொடர்ச்சியாக கூறிவருகின்றோம்.
கடனுக்கு மேல் கடன் வாங்கி நாட்டை இன்று நெருக்கடிக்குள் தள்ளியுள்ளனர். வருமான மார்க்கங்கள் குறையும்போது நாட்டு மக்களே பாதிப்படைகின்றனர்.

தற்போதைய நிலையில் பாடசாலைகளின் நீர்கட்டணத்தை செலுத்துமாறு அதிபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அது மட்டுமன்றி 12 இலட்சம் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய போசணை உணவை இடைநிறுத்தியுள்ளனர். காகிதங்களுக்கான தட்டுப்பாடு காரணமாக பரீட்சைகளை நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான பல்வேறு நெருக்கடிகளுக்கு மாணவர்களை இந்த அரசாங்கம் தள்ளியுள்ளது. 43 இலட்சம் மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது.

பதவி விலகுவதாகக் கூறி புதிய நாடகத்தை அரங்கேற்றுகின்றனர். உண்மையில் மக்களை ஏமாற்றுவதற்கா இவ்வாறு நடந்துகொள்கின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *