கோட்டாவை அமெரிக்காவுக்கு விரட்டியடிப்போம் – புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்

நாட்டின் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ளதை அடுத்து, ஜனாதிபதி உடனடியாக பதவி விலக வேண்டும் எனக் கோரி புத்தளத்தில் இன்று மாலை மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

புத்தளம் – கொழும்பு முகத்திடலுக்கு முன்பாக இளைஞர்கள், யுவதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் என 500 இற்கும் மேற்பட்டோர் இவ்வாறு புத்தளம் நகரில் ஒன்றுகூடியமையால் பெரும் பதற்ற நிலையும் ஏற்பட்டது.

இதனால், நகரில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது. புத்தளம் நகர் ஊடாக குருநாகல் மற்றும் அநுராதபுரம், வவுனியா பயணிக்கும் வாகனங்கள் மாற்று வழி ஊடாக அனுப்பி வைக்கப்பட்டன.

புத்தளம் நகர் முழுவதும் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்ததுடன், போக்குவரத்து பொலிஸாரும் வீதி பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்தனர்.

“கோட்டா ஒரு பைத்தியகாரன்”, “ராஜபக்‌ஷாக்கள் டொலர் திருடர்கள்”, ” வேலை தெரியாவிட்டால், தெரிந்தவர்களிடம் ஒப்படைத்துவிட்டு வீடு செல்லுங்கள்”, “ராஷபக்‌ஷ எனும் பெயரில் இலங்கையில் அரசியல் செய்ய இனி யாருக்கும் இடமில்லை. இனி யாரும் வரவும் வேண்டாம்”, ” குடும்பத்தோடு அமெரிக்காவுக்கே போயிடு கோட்டா” என இதுபோன்ற பல கோஷங்களை எழுப்பி சுலோகங்களை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.

அத்துடன், மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவருக்கு இந்த நாட்டை ஆட்சி செய்வதற்கு சந்தர்ப்பத்தை வழங்கியமைக்கு வருத்தத்தை தெரிவிப்பதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

அத்தோடு ராஜபக்‌ஷாக்களை இலங்கையிலிருந்து விரட்டியடிக்கும் வரை ஓயப் போவதில்லை எனவும் இதற்கு அனைவரும் இன, மத பேதங்களுக்கு அப்பால் ஒன்றினைய வேண்டியது காலத்தின் தேவையாகும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குறிப்பிட்டனர்.

புத்தளம் – கொழும்பு முகத்திடலுக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம் பின்னர் புத்தளம் நகர் சுற்றுவட்டம், தபால் சுற்றுவட்டம் ஊடாக புத்தளம் பஸ் நிலையம் வரை பேரணியாக சென்று மீண்டும் புத்தளம் – கொழும்பு முகத்திடலை வந்தடைந்தது.

சுமார் மூன்று மணித்தியாலங்களின் பின்னர் புத்தளம் நகரில் பட்டாசு கொழுத்தி போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *