
நாட்டில் ஊழல் மோசடியில் ஈடுபட்ட அனைவரும் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்பதே அனைவரினதும் நிலைப்பாடு என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று ஊடகங்களுக்குக் கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டை இவ்வாறான ஒரு நெருக்கடிக்குள் கொண்டுவந்துவிட்ட ஜனாதிபதி தலைமையிலான ஒட்டுமொத்த தரப்பினரும் வெளியேற வேண்டும் என்பதற்காகவே மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
எனினும் நாட்டு மக்களை திசை திருப்பும் நோக்கில் ராஜபக்ஷர்களின் குடும்பத்துக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கில் விமல் வீரவன்ச தரப்பினர் செயற்பட்டு வருகின்றனர்.
தற்போது இடைக்கால அரசாங்கமொன்றை அமைக்க வேண்டும் என்று கோருகின்றனர். அமைச்சரவை இராஜினாமா செய்துள்ளது. பிரதமர் இராஜினாமா செய்வார் என்று கூறுகின்றனர்.
தற்போதைய நிலையில் இராஜினாமா கடிதங்கள் கையளிக்கப்பட்டுள்ளமைகூட சட்டத்துக்கு அமைவானதாக இல்லை. வெறுமனே பிரதமருக்கு கடிதத்தை அனுப்பியுள்ளனர்.
சட்டத்துக்கு அமைவாக இந்த இராஜினாமாக கடிதங்கள் கையளிக்கப்படவில்லை. தற்போதைய அமைச்சர்கள் பதவி விலகி, மீண்டும் அந்த அமைச்சர்களையே பதவியில் அமர்த்தும் செயற்பாடுகளை நாம் கேட்கவில்லை.
விமல் வீரவன்ச போன்றோர் லீக்வான் யூ, பூட்டின் போன்றோரின் பெயரை கூறியே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஆட்சியில் அமர்த்தினர்.
அதுமட்டுமன்றி விமல் வீரவன்ச தரப்பினரே, ராஜபக்ஷர்கள் சார்பான எண்ணக்கருக்களை உருவாக்கி, இனவாதத்தை தூண்டி நாட்டை நெருக்கடிக்குள் தள்ளினர்.
தற்போது மீண்டுமொருமுறை மாற்றுவழியில் வந்து ராஜபக்ஷர்கள் எண்ணக்கருவை பாதுகாப்பதற்காகவே இந்த உபாய மார்க்கத்தை அவர்கள் பயன்படுத்திகின்றார்கள் என்பதை நாம் தெளிவாகக் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.
எனவே நாம் தவறியேனும் இவ்வாறான தீர்மானங்களுக்கு நாம் செவிமடுக்கப்போவதில்லை. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டியது அவசியம். – என்றார்.