சிலை விவகாரம்- சைவ மகா சபை கடும் கண்டனம்

மடுப் பிரதேசப் பிள்ளையாரை அகற்றி அந்தோனியாரை நிறுவியமைக்கு சைவ மகா சபை கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.

சைவ மக்களை மிகவும் வேதனைப்படுத்தும் வகையிலும் மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையிலும் மடுப் பிரதேசத்தில் பிள்ளையார் சிலை அகற்றப்பட்டு அந்தோனியராக மாற்றப்பட்ட சம்பவத்தை பார்க்கின்றோம்.

பிள்ளையாரை போற்றி வணங்கும் ஆவணி விநாயக சதுர்த்தியை அண்டிய நாட்களில் இச் சம்பவம் நடைபெற்றிருக்கிறது.

உலக மத நல்லிணக்க மாநாடு இத்தாலியில் நடைபெறும் இத்தருணம் மேற்படி சம்பவத்தையும் மன்னார் மாவடத்தில் தொடர்ச்சியாக தமிழ் சைவர்களின் வழிபாட்டு உரிமைகள் மீது மேற்கொள்ளப்படும் மிலேச்சுதமான சம்பவங்களும் முழு தீவிலும் வசிக்கும் சைவ மக்களிற்கு ஆழ்ந்த துயரை தோற்றுவிக்கின்றது.

இன்றும் மடுப்பிரதேச செயலகப் பிரிவு பழம்பெரும் பல சைவத் தமிழ் கிராமங்களை உள்ளடக்கிய வகையில் மூன்றில் இரண்டு பங்கினர் அதாவது 65% சைவ மக்களாகவே காணப்படுகின்றனர். அத்தோடு ஏனைய மத மக்களுடன் நல்லிணக்கத்துடனேயே வாழ்ந்து வருகின்றனர். இருப்பினும் திருக்கேதீச்சர வளைவு தகர்க்கப்பட்டது போன்று அவ்வப்போது வணக்கத்தலங்கலுள்ள சிலைகள் களவாடப்படுவது சேதமாக்கப்படுவது தொடர் கதையாக உள்ளது.

இந்த விடயத்தில் குற்றவாளிகள் உடனடியாக கண்டறியப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதுடன் பின்னனியும் ஆராயப்பட வேண்டும்.
உடனடியாக மீள பிள்ளையார் சிலை நிறுவ மன்னார் அரச அதிபர், மடு பிரதேச செயலர், காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டு கொள்கின்றோம்.

நாடே கொரோனா பேரிடரை சந்தித்து ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள போது இச்சம்பவம் நடைபெற்றிருப்பது அதிர்ச்சி அளிக்கின்றது.

இந்த விடயத்துடன் தொடர்புடைய விசமிகளை கண்டறிய அனைத்து மதத் தலைவர்களும் ஒத்துழைக்க வேண்டுவதுடன் இச்சம்பவத்தை பக்கச் சார்பின்றி வன்மையாக கண்டித்து இந்த மண்ணின் பூர்வீக சமயமான தமிழ் சைவத்தின் வழிபாட்டு செல்நெறிகளை பாதுகாக்க அனைவரும் முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுகின்றோம்.

மடுப் பிரதேச தமிழ்ச்சைவ மக்களின் மனத் தாங்கலில் நாமும் பங்கெடுப்பதுடன் மீள விநாயகப் பெருமான் எழுந்தருள அனைத்து சைவ மக்கள் சார்ப்பாகவும் அகில இலங்கை . சைவ மகா சபை பிரார்த்தித்து நிற்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *