
பாராளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு கூடவுள்ளது.
இன்று காலை பாராளுமன்றம் கூடும் போது பாராளுமன்ற அதிகார அமைப்பில் அதிரடி மாற்றங்கள் நிகழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசாங்கத்திலிருந்து ஆதரவை விலக்கிக் கொண்ட 11 கட்சிகளின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும், 14 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் இன்று பாராளுமன்றத்தில் தனிக்குழுவாக செயற்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி, அரசாங்கம் இதுவரையில் வைத்திருந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தில் மாற்றத்தைக் காண முடியும்.
அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை மட்டும் இழக்க முடியாது, தனிப்பெரும்பான்மையையும் இழக்க முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில நேற்று தெரிவித்தார்.
பெரமுன உறுப்பினர்கள் பலர் அதிருப்தியில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுசில் பிரேமஜயந்த, அநுரபிரியதர்சன யாப்பா, சந்திம வீரக்கொடி உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தனித்து செயற்படவுள்ளதாக பகிரங்கமாக அறிவித்துள்ள நிலையில், பாராளுமன்றத்திற்குள் எவ்வகையாக மாற்றம் நிகழும் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.